ADVERTISEMENT

இயற்கை மருத்துவம், யோகா படிப்பில் சேர வகுக்கப்பட்ட விதிக்கு இடைக்கால தடை.!!

06:07 PM Jun 11, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

தேசிய திறந்த நிலை கல்வி நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்பில் சேர தகுதியில்லை என்ற விதிக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி தேர்வுக்குழு, கொள்கை விளக்க குறிப்பேட்டை வெளியிட்டது. அதில், தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனத்தில் படித்தவர்கள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் இப்படிப்புக்கு விண்ணப்பித்து, கோவை தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி வீரலட்சுமியிடம், டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திடம் இருந்து தகுதிச்சான்று பெற்று சமர்ப்பிக்கும்படி, கோவை தனியார் கல்லூரி தெரிவித்துள்ளது. ஏற்கனவே கொள்கை விளக்க குறிப்பேட்டில், தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தில் படித்தவர்கள், இப்படிப்பில் சேர தகுதியில்லை எனத் தெரிவித்துள்ளதால், பல்கலைக்கழகம், தகுதிச் சான்று தராது எனக் கூறி, சம்பந்தப்பட்ட விதியை செல்லாது என அறிவிக்க கோரி வீரலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், 2019-20ம் ஆண்டில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையின் போது, இது போன்ற விதி கொண்டு வரப்பட்ட போது, அதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்ததாகவும், டில்லி உயர் நீதிமன்றம், இந்த விதியை ரத்து செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனத்தில் படித்தவர்கள், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்பில் சேர தகுதியில்லை என்ற கொள்கை விளக்க குறிப்பேட்டு விதிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், மருத்துவ பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT