ADVERTISEMENT

தேர்தல் நிதி தர மக்களை சுரண்டும் நிறுவனங்கள் – விலை உயர்வால் திண்டாடும் கட்டுமானத்துறை

12:59 AM Feb 11, 2019 | raja@nakkheeran.in


இந்தியா முழுமைக்கும் வீடுகள், வணிக வளாகங்கள், பெரு நிறுவனத்துக்கான கட்டிடங்கள், அரசு கட்டிடங்கள், பாலங்கள் எனப்பல கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகின்றன. தமிழகத்தில் விவசயாத்துக்கு அடுத்தபடியாக கட்டுமானத்துறையில் தான் அதிகளவு தொழிலாளர்கள் உள்ளனர். அந்தளவுக்கு அந்த துறை பெரியது.

ADVERTISEMENT


ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பிறந்ததும் கட்டுமானத்துறைக்கான செங்கல், சிமெண்ட், மணல், கம்பி, பெயிண்ட் என பொருட்களின் விலை உயர்வது வாடிக்கை. அந்த விலை உயர்வு என்பது 2 முதல் 5 சதவீதமாக இருக்கும். ஜனவரி மாதம் முதல் ஜீன் மாதம் வரை இந்த விலை உயர்வு இருக்கும், பின்னர் மழைக்காலம் தொடங்கியதும் கட்டுமான பொருட்களின் விலை குறையும்.

ADVERTISEMENT


இந்த 2019 ஜனவரி மாதமும் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு என்பது 10 சதவிதம் அளவுக்கு திடீரென உயர்ந்து வணிகர்களையும், பொதுமக்களையும் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இதுப்பற்றிய எதிர்ப்பு சத்தம் எந்த பக்கமும் கிடையாது. பொதுமக்களை பாதிக்கும் விவகாரத்தில் முந்திக்கொண்டு அறிக்கை தரும் அரசியல் கட்சி தலைவரும், தலைவர்களும் கமுக்கமாக உள்ளனர்.


இது எதனால் என கட்டுமானப்பொருட்களின் விற்பனையாளர்கள் சிலரை சந்தித்து நாம் உரையாடியபோது, மழையில்லாத காலக்கட்டத்தில் தான் கட்டுமானப்பணிகள் அதிகளவில் நடைபெறும். அப்போது பொருட்களின் விலை உயரும். அந்த விலை உயர்வு என்பது 2 முதல் 5 சதவிதம் அளவுக்கு இருக்கும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக விலையை உயர்த்தியுள்ளார்கள்.


கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் ஏ கிரேடு சிமெண்ட் 1 மூட்டை விலை 350, 360 அதிகபட்சமாக 390 வரை விற்பனையானது. பி கிரேட் சிமெண்ட் 1 மூட்டை விலை 310, 330 என விற்பனையானது. கடந்த ஜனவரி இறுதி முதல் 10 சதவிதம் விலை உயர்ந்து ஏ கிரேட் சிமெண்ட் விலை 30 முதல் 40 ரூபாய் உயர்ந்துள்ளது, பி கிரேட் சிமெண்ட் 20 முதல் 30 ரூபாய் என உயர்ந்துள்ளது.

அதேப்போல் கட்டுமானத்துறைக்கான டி.எம்.டி கம்பி கம்பெனிகளும் 10 சதவிதம் உயர்த்தியுள்ளது. முன்பு ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனையானது, தற்போது 50 ரூபாயாக உயர்ந்துள்ளது. பெரிய கம்பெனி கம்பிகள் விலையும் அதே அளவுக்கு உயர்ந்துள்ளது. இப்படி கட்டுமானத்துறையில் உபயோகிக்கப்படும் அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது என்றனர்.


எதற்காக இப்படியொரு விலை உயர்வு ? என காரணம் கேட்டபோது, நாடாளமன்ற தேர்தல் தான் காரணம் என்றார்கள்.


சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலின் போது சர்வதேச அளவில், இந்திய அளவில், மாநில அளவில் தொழில்கள் செய்யும் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி தருவது வழக்கம். பெரு நிறுவனங்கள் அனைத்தும் கோடிகளில் தான் தேர்தல் நிதி தரும். ஆளும்கட்சிக்கு இவ்வளவு, எதிர்கட்சிக்கு இவ்வளவு, சிறு கட்சிகளுக்கு இவ்வளவு, சாதி கட்சிகளுக்கு இவ்வளவு என தரவேண்டும், தராமல் இருக்க முடியாது, அப்படி தரவில்லையென்றால் அவர்களால் பின்பு நிம்மதியாக தொழில் செய்ய முடியாது. காரணம் நிறுவனங்கள் அரசிடம் பல சலுகைகளை பெறுகின்றன, அதோடு, அரசை ஏமாற்றவும் செய்து நிதி முறைகேடுகளில் ஈடுபடும். இது ஆளும்கட்சி, எதிர்கட்சிகளுக்கு தெரியும். கண்டும் காணாமல் விட்டுவிடுவார்கள். அதற்கு காரணம், அந்த நிறுவன்ஙக்ள தரும் நிதி. நிதி தரவில்லையென்றால் குடைச்சல் தருவார்கள் என்பதால் அதற்கு பயந்தே தந்துவிடுவார்கள்.


இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சியும் தொழில் நிறுவனங்களிடம் கோடிகளில் தேர்தல் நிதி கேட்டுள்ளார்கள். நிறுவனங்கள் எப்போதும் தங்களது லாபத்தில் இருந்து எந்த காலத்திலும் தராது. இப்படி விலையை உயர்த்தி, அதில் இருந்தே தரும். அப்படித்தான் தேர்தல் நிதி தருவதற்காக வழக்கத்தை விட கட்டுமானப்பொருட்களின் மீது விலையை உயர்த்தியுள்ளது இந்த நிறுவனங்கள் என்றார்கள்.


தமிழகத்தில் முன்னணியில் உள்ள ஒரு பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனம், தனது ஒரு பேக்டரியில் இருந்து மட்டும் தினசரி 10 லட்சம் மூட்டைகள் வெளியே அனுப்புகின்றன. ஒரு மூட்டை மீது 40 ரூபாய் விலையை உயர்த்தியுள்ளது அந்த நிறுவனம். தற்போது ஒரு மூட்டை சிமெண்ட் விலை 405 ரூபாய். இப்படி விலையை உயர்த்தியதன் மூலமாக தினசரி 4 கோடி ரூபாய் கூடுதலாக செல்கிறது அந்த நிறுவனத்துக்கு. தேர்தல் முடியும் வரை இந்த விலை உயர்வு இருக்கும்.


சுமார் 3 மாதம் மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டாலும், இந்த விலை உயர்வின் மூலம் மாதம் 120 கோடி, 3 மாதத்துக்கு 360 கோடியை சம்பாதிக்கிறது அந்த நிறுவனம். அதுவும் ஒரு பேக்டரியில் இருந்து மட்டும். இந்த நிறுவனத்துக்கு தமிழகத்தில் மட்டும் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் பேக்டரிகள் உள்ளது. இதேப்போல் தான் 10க்கும் மேற்பட்ட சிமெண்ட் கம்பெனிகள் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளன. இந்த கம்பெனிகள் இந்த 3 மாதத்தில் மட்டும் தோராயமாக 10 ஆயிரம் கோடியை விலை உயர்வின் மூலம் மக்களிடம்மிருந்து சுரண்டும். மக்களிடமிருந்து சுரண்டிய இந்த தொகையில் இருந்து தான் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதியாக தரவுள்ளன. டி.எம்.டி கம்பி நிறுவனங்களும் அதையேத்தான் செய்யவுள்ளன என்றார்கள்.


அதேப்போல் தமிழகத்தில் பாலாறு, வைகையாறு, தென்பெண்ணையாறு, குண்டலாறு என அனைத்து ஆறுகளிலும் மணல் எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சில குவாரிகள் மட்டும்மே அரசின் சார்பில் செயல்படுகின்றன. ஒருநாளைக்கு தமிழகத்துக்கு மட்டும் 40 ஆயிரம் யூனிட் மணல் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்போது அரசின் சார்பில், திருட்டுதனமாக அள்ளிவிற்கப்படுவதே 10 ஆயிரம் யூனிட் மணல் தான். அதேப்போல் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகன் இறக்குமதி செய்த மலேசியா மணல் விற்பனையை தனது கட்டுப்பாட்டில் எடுத்து கொள்ளை விலை வைத்து விற்பனை செய்கிறார். இதனால் மணலுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. மக்களும் மணலுக்கு மாற்றான எம்-சாண்ட் க்கு கட்டுமானம் செய்பவர்கள் மாறிவிட்டார்கள்.


தமிழகத்தில், திருநெல்வேலி, திருச்சி, கரூர், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் எம்-சாண்ட் தயாரிக்கும் ஆலைகள் இயங்கிவருகின்றன. அரசியல்வாதிகள், அரசியல்வாதிகளின் பினாமிகள் நடத்தும் இந்த ஆலைகளிலும் தேர்தல் நிதி ஒவ்வொரு கட்சியின் சார்பில் அதன் சங்கங்களில் கேட்பதாக கூறப்படுகிறது. இதனால் அதன் விலையையும் உயர்த்த முடிவு செய்து ஆலோசனை செய்து வருகின்றனர் என்கின்றனர்.


இரண்டாண்டுக்கு முன்பு மோடி அரசின் பணமதிப்பிழப்பால் கட்டுமானத்துறை பெரும் சரிவை சந்தித்தது, தினசரி 100 கோடி ரூபாய்க்கு மேல் தமிழகத்தில் மட்டும் இந்த துறையில் ரொக்க பரிமாற்றம் நடைபெற்றுவந்தது. பண மதிப்பிழப்பால் பண பரிமாற்றம் தடைப்பட்டது, தொழில்கள் முடங்கின. லட்ச கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்தனர். அதிலிருந்து எழுந்து உட்காருவதற்குள் மோடியரசு ஜி.எஸ்.டியால் அடித்தது, அதிலிருந்து இன்னும் மீளவில்லை கட்டுமானத்துறை. தற்போது, தேர்தல் வந்துவிட்டதால் மீண்டும் ஒரு விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு கட்டுமானப்பணிகளில் ஒரு தேக்கம் ஏற்படும் என்கிறார்கள் இந்த துறையில் உள்ளவர்கள்.


தேர்தல் நிதி என்பது தேர்தல் காலக்கட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரச்சார செலவு, வாக்குகள் பெற வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக கட்சிகள் திரட்டுவது. மக்களுக்கு தருவதற்காக மக்களிடம்மிருந்தே சுரண்டி மக்களிடம்மே திருப்பி தரப்போகிறார்கள் என்பதே நிதர்சனம். இந்த அரசியலை, மோசடியை மக்கள் அறியாதவரை மக்களிடம் சுரண்டிக்கொண்டே இருப்பார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT