ADVERTISEMENT

அதிகரித்த நீர்வரத்து... நிரம்பிய பவானிசாகர் அணை...!

07:07 PM Dec 01, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணை. இந்த அணைமூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. மொத்தம் 120 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 105 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். அணையின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது.

சென்ற சில நாட்களாக நீலகிரி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துவந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்துவந்தது. சென்ற நான்கு நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துவந்தது. இந்த நிலையில், செவ்வாய்கிழமைமுதல் (30.11.2021) மீண்டும் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் மீண்டும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நீர் மட்டமும் 105 அடியை நெருங்கியுள்ளது. 1ஆம் தேதி (இன்று) காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீரின் அளவு 104.49 அடியில் உள்ளது.

அணைக்கு விநாடிக்கு 6,622 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1,800 கன அடியும், பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 1,900 கனஅடி நீர் பவானிசாகர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டுவருகிறது. தொடர்ந்து நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழைபெய்துவருவதால் பவானி சாகர் அணை நீரின் அளவு 105 அடியை நெருங்கிவருகிறது. 105 அடியை தொட்டதும் அணைக்குவரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றில் திருப்பிவிடப்பட உள்ளது. இது பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றுடன் கலந்துசெல்லும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT