ADVERTISEMENT

கரோனாவால் மருத்துவமனையில் மகன்... வீட்டு வாசலிலில் உயிரிழந்த தாய்... 4 மணி நேரமாகக் கண்டுகொள்ளாத நகராட்சி!

09:55 PM Jul 27, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருத்தணி அருகே மகன் கரோனாவிற்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் வீட்டில் வயதான தாய் உயிரிழந்துள்ளார். உயிரிழந்து 4 மணிநேரமாகியும் அவரது உடலை எடுக்க யாரும் முன்வராத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட அங்காலம்மன் தெருவைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி வீட்டு வாசலிலேயே உயிரிழந்துள்ளார். அவரது மகனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதனை அடுத்து அவருக்கு வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் இருந்த வீடு தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது. வீட்டில் அவரது தாய் மட்டும் இருந்தார். இன்று காலையில் மூதாட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அக்கம்பக்கத்தினர் திருத்தணி அரசு மருத்துவமனைக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த மருத்துவப் பணியாளர்கள் வீடு கரோனாவிற்காக தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடியாது எனக்கூறிவிட்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து அவர் உயிரிழந்திருக்கிறார். கிட்டத்தட்ட நான்கு மணி நேரமாக அவரது சடலத்தை எடுப்பதற்கு நகராட்சி நிர்வாகமோ அல்லது சுகாதாரத்துறையினரோ வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடமும், சுகாதாரத்துறை அதிகாரிகளிடமும் தொடர்ந்து புகார் தெரிவித்தும் கூட இறந்தவரின் சடலத்தை மீட்க அவர்கள் வரவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல் மாவட்ட ஆட்சியருக்கு தெரியவர, அவர் உத்தரவின் பெயரில் இறந்தவரின் உடலை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியான நிலையில், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT