ADVERTISEMENT

முதல்வர் தொகுதியில் பயங்கரம்; மகளை சுத்தியலால் அடித்து கொன்ற தந்தை; தானும் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை!

07:15 AM Feb 20, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதிக்கு உட்பட்ட மணியக்காரம்பாளையம் அருகே, பெற்ற மகளை மனநலம் பாதித்த தந்தையே சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டு, தானும் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள மணியக்காரம்பாளையம் ஆதிகாட்டுரைச் சேர்ந்தவர் கோபால் (54). காய்கறி வியாபாரி. தள்ளுவண்டி மூலம் காய்கறி விற்று வந்தார். இவருடைய மனைவி மணி (50). இவர்களுக்கு பிரியா (15) என்ற மகள் இருந்தார். அவர், தாதாபுரம் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர்களுக்கு ரமேஷ் கண்ணன் (18) என்ற மகனும் இருக்கிறார்.

கோபாலின் மனைவி மணி, கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி. அடிக்கடி வேலைக்காக வெளியூருக்குச் சென்று விடுவார். மகன் ரமேஷ் கண்ணன், செட்டிமாங்குறிச்சியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கோபாலுக்கு திடீரென்று லேசாக மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போதிலிருந்து, ஏதாவது ஒன்றை சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி வந்துள்ளார். அடிக்கடி தனது மகன், மகளைக் கொன்றுவிட்டதாகவும், தான் மாடியில் இருந்து குதித்துவிட்டதாகவும் கூறி வந்துள்ளார். இதனால் அவருக்கு மருத்துவமனையில் அவ்வப்போது மனநல மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு மனைவி மணி, ஈரோடுக்கு கரும்பு வெட்டும் வேலைக்குச் சென்று விட்டார். மகன் ரமேஷ்கண்ணன் பேக்கரி வேலையை முடித்துக்கொண்டு, பெரும்பாலும் அப்பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டிலேயே தங்கி விடுவது வழக்கம். சம்பவத்தன்றும் அவர் தாத்தா வீட்டிலேயே தங்கி விட்டார்.

இதையடுத்து வீட்டில் கோபாலும், அவருடைய மகள் பிரியாவும் மட்டும் இருந்துள்ளனர். வெள்ளிக்கிழமை (பிப். 19) அதிகாலை 2 மணியளவில், கோபால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு, அலறியபடி அருகே வசிக்கும் தம்பி சுந்தர்ராஜ் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு தம்பி மற்றும் பக்கத்து வீடுகளில் வசிக்கும் உறவினர்களை எழுப்பி, மகள் பிரியாவை சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டேன் எனக் கூறியுள்ளார்.

இதனால் பதற்றம் அடைந்த உறவினர்கள் கோபாலின் வீட்டிற்குச் சென்று பார்த்தனர். கோபாலும் அவர்களுக்கு முன்னால் ஓடிச்சென்றுள்ளார். வீட்டிற்குள் சென்றதும் கோபால் மாடியில் ஏறியுள்ளார். உள்ளே சென்ற உறவினர்கள் பிரியாவை பார்த்துள்ளனர். அங்கு தலையில் சுத்தியலால் தாக்கப்பட்டதால் ஏராளமான ரத்தம் வெளியேறிய நிலையில் சடலமாகக் கிடப்பது தெரிய வந்தது.

அதைப் பார்த்து உறவினர்கள் கதறி துடித்தனர். அப்போது மாடிக்குச் சென்ற கோபால், திடீரென்று மேலே இருந்து கீழே குதித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அடுத்தடுத்து நிகழ்ந்த இச்சம்பவங்களால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து இடைப்பாடி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சங்ககிரி டிஎஸ்பி ரமேஷ், இடைப்பாடி காவல் ஆய்வாளர் செந்தில் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர்.

இதற்கிடையே, ஈரோடுக்கு வேலைக்குச் சென்றிருந்த மனைவி மணிக்கு தகவல் கொடுத்தனர். அவர் வீட்டிற்கு வந்து மகள், கணவர் சடலங்களைப் பார்த்து கதறி அழுதார். சிறிது நேரத்தில் அவர் அதிர்ச்சியில் மயக்கம் அடைந்தார். அவரை மீட்டு இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொலை செய்யப்பட்ட பிரியா மற்றும் அவருடைய தந்தை கோபாலின் சடலங்களைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் இருந்து கொலைக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சுத்தியல், கோபால் கழுத்தை அறுத்துக்கொள்ளப் பயன்படுத்திய ஆக்ஸா பிளேடு கத்தி ஆகியவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்தைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், ''கோபால் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் அடிக்கடி தன் மகன், மகளைக் கொன்றுவிட்டதாவும், தானும் தற்கொலை செய்து கொண்டதாகவும் தனது மனைவி, அக்கம்பக்கத்தினரிடம் புலம்பிக்கொண்டே இருப்பார். அதை சாதாரணமாக விட்டுவிட்டதால்தான் இன்று கொலையும், தற்கொலையும் நடந்துள்ளன,'' என்றனர்.

அதிகாலையில் நடந்த இந்த சம்பவம், ஆதிகாட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT