ADVERTISEMENT

கால்பந்தாட்ட வீராங்கனை உயிரிழந்த சம்பவம்; அரசு மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் மறுப்பு

06:12 PM Nov 18, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு பெரியார் நகர் புறநகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு உணர்விழப்புக் காரணமாக நவ. 8-ம் தேதி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால் அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருடைய வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. அதனையடுத்து பிரியாவின் வலது கால் அகற்றப்பட்டது. கால் அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த பிரியா உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக கடந்த 15.11.2022 அன்று காலை 7.15 மணிக்கு உயிரிழந்தார். இதில் அலட்சியமாக செயல்பட்ட சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதேபோல் போலீசாரும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பெரியார் நகர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சோமசுந்தரம், பால் ராம் சங்கர் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறுவதற்கு மனுத் தாக்கல் செய்திருந்தனர். தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், நீதிமன்றம் கொடுக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதுதான் சம்பவம் நடந்துள்ளது, இது தொடர்பான விசாரணை நடத்த சிறிய அவகாசம் வேண்டும் என்பதால் முன்ஜாமீன் தர முடியாது என மருத்துவர்கள் இருவரின் முன்ஜாமீன் மனுவை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT