ADVERTISEMENT

உயிரை பறித்த பிறந்தநாள் பார்ட்டி...!!!

07:23 PM Feb 15, 2020 | kalaimohan

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த நஞ்சை ஊத்துக்குளி காலனியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி அழகரசி. இவர்களது ஒரே மகன் அலெக்சாண்டர் 14 வயது. அவல்பூந்துறை அருகே உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

அலெக்சாண்டர் தன்னுடன் படிக்கும் மாணவர் ஒருவருக்கு பிறந்தநாள் என்பதால் பள்ளி முடிந்து நேற்று மாலை 5 மணி அளவில் அவனது நண்பர்களுடன் சேர்ந்து அருகில் உள்ள ஒரு தோட்டத்திற்கு போயுள்ளார்கள். அங்கு வைத்து கேக் வெட்டி கொண்டாடினார்கள். அப்போது அலெக்சாண்டரின் சட்டையில் கேக் ஒட்டியது. அதை சுத்தம் செய்வதற்காக தோட்டத்தில் உள்ள ஒரு கிணற்றில் அலெக்சாண்டர் மட்டும் இறங்கியுள்ளார். குனிந்து தண்ணீரை எடுத்து சுத்தம் செய்ய முயன்றபோது எதிர்பாராதவிதமாக அவர் கிணற்றில் தவறி விழுந்து விட்டார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற நண்பர்கள் காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டனர் அக்கம் பக்கத்தில் இருந்த சில இளைஞர்கள் கிணற்றில் குதித்து மாணவனை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. பிறகு மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து கிணற்றில் மாணவனை தேடினர். ஆனால் இறுதியில் சிறிது நேரத்திற்கு பிறகு அலெக்சாண்டர் உடல் இறந்து போன நிலையில் மீட்கப்பட்டது.

இது சம்பந்தமாக அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் மாணவர் அலெக்சாண்டர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டது. மாணவனின் உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டு வந்து அவர்கள் மாணவன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மாணவனின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்று உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு இறந்த மாணவன் உடலை அடக்கம் செய்ய கொண்டு சென்றனர்.

பிறந்தநாள் கொண்டாட சென்ற மாணவனுக்கு ஏற்பட்ட இந்த சோக நிகழ்வு அந்த பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT