ADVERTISEMENT

10 தொகுதிகளில் தேர்தலைப் புறக்கணிப்போம்... அதிமுகவுக்கு எதிராகத் தீர்மானம்!

06:48 PM Dec 17, 2020 | tarivazhagan

ADVERTISEMENT


ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களின் விவசாயப் பாசனத்திற்குச் செல்லும் கீழ்பவானி பிரதான வாய்க்காலில், கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் இல்லாவிடில் இந்த அரசை வரும் தேர்தலில் ஆதரிக்கப் போவதில்லை என்றும் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவதோடு, வரும் சட்டமன்றத் தேர்தலில் 10 தொகுதியில் கீழ்பவானி பாசன விவசாயிகள் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT


ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து செல்லும் கீழ்பவானி பிரதான பாசன வாய்க்கால் மூலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனமும் 1 லட்ச ஏக்கருக்கும் மேல் மறைமுக பாசனமும் பெற்று வருகிறது. இந்த மூன்று மாவட்டப் பொதுமக்களின் குடிநீர் ஆதாராமாகவும் இது திகழ்கிறது.


இந்த நிலையில், தமிழக அரசு கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க ரூ.178 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகளுக்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால், வாய்க்காலில் செல்லும் கசிவு நீர் மூலம், பாசனம் பெறும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள், நீர் ஆதாரம் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல், பாலைவனமாகும் சூழ்நிலை உள்ளது. தென்னை, வாழை, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட நீண்ட காலப் பயிர்கள் பாதிக்கப்படும் எனவும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடுக்காம்பாளைத்தில் கீழ்பவானி பாசன விவசாயிகள் சார்பில், ஆலோசனைக் கூட்டம் 17ஆம் தேதி நடைபெற்றது. இதில் நாகவேதம்பாளையம், கடுக்காம்பாளையம், அய்யம்புதூர், பழையூர், கோரக்காட்டூர், வெள்ளாங்கோயில், கொரவம்பாளையம் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் மாவட்ட விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், கீழ்பவானி பாசன வாய்க்காலில் அமைக்கப்படும் கான்கிரீட் தளத்தை அரசு கைவிட வேண்டும் என்றும் இல்லாவிடில், வரும் தேர்தலில் ஆளும் அ.தி.மு.க அரசுக்கு எதிராகச் செயல்படுவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், தொடர் போராட்டங்களிலும் ஈடுபடுவதுடன் வரும் சட்டமன்றத் தேர்தலில் கீழ்பவானி பாசனப் பகுதிகளில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT