ADVERTISEMENT

ஐ.பெரியசாமி தொகுதியில் ஆளுங்கட்சியின் சதி அம்பலம்! தண்ணீருக்காகப் போராடும் மக்கள்!!

06:58 PM Nov 05, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

மாதிரி படம்

ஐ.பெரியசாமி தொகுதியான ஆத்தூர் தொகுதியில் உள்ள, காமராஜர் நீர்த் தேக்கத்திற்கு மேல் இருக்கும், பெரிய கன்னிமார் கோவில் நீர் வரத்து வாய்க்காலுக்கு மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் பருவகால மழை காலங்களிலிருந்து தண்ணீர் வருவது வழக்கம்.

ADVERTISEMENT

இப்படி வரக்கூடிய தண்ணீர் நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதிக்கும் மற்றொருபுரம் ஆத்தூர் நீர்த் தேக்கம் சென்று அதன் வழியாக கொடகனாற்றுக்கும் செல்லும். அதற்காக பாறைக்கற்களை வைத்து தடுப்பணை போன்ற ஒரு அமைப்பை முன்னோர்கள் ஏற்படுத்தியிருந்தனர். அதன்மூலம், கசிவு நீர்கள் அந்தக் கற்பாறைகளுக்கிடையே செல்லும். அது போல் மழை காலங்களில் தடுப்பணையைத் தாண்டி, அதிக அளவில் தண்ணீர் டேமுக்கு செல்லும். அதன் மூலம் தான் ஆத்தூர் தொகுதியில் உள்ள நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் விவசாயிகள், ஆத்தூர் பகுதி விவசாயிகள், கொடகனாறு விவசாயிகள் என மூன்று தரப்பு விவசாயிகளும் தங்கள் நிலங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டும் குடிநீருக்காகவும் இந்தத் தண்ணீரை பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில்தான், கடந்த சில வருடங்களாக மூன்று தரப்பு விவசாயிகளுக்கிடையே தண்ணீர் பகிர்ந்து கொள்வதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதாவது பாறைகற்களால் ஆன தடுப்பணை மீது பொதுப்பணித்துறை அதிகாரிகள் கான்கிரீட்டால் ஆன சிமெண்ட் தளம் போட்டு அடைத்ததால், ஆத்தூர் நீர்த் தேக்கத்திற்கும், கொடகனாற்றுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை மூலம் வரக்கூடிய தண்ணீர் செல்வதில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்ததுடன், இந்த விஷயத்தை தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஐ.பி.பெரியசாமி காதுக்கு கொண்டு சென்றனர். அதன் அடிப்படையில் ஐ.பி. பெரியசாமியும் மூன்று பகுதி விவசாய சங்கப் பொறுப்பாளர்களை அழைத்துக்கொண்டு மாவட்ட கலெக்டர் விஜயலெட்சுமியை சந்தித்து தண்ணீர் பகிர்ந்துகொள்வதில் ஏற்பட்ட சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டுமென வலியுறுத்தினார்.


அதன் அடிப்படையில்தான், ஒரு வல்லுநர் குழுவை அமைத்து ஆய்வு செய்து வருகிறார்கள். அப்படி இருக்கும் போது பிரச்சனைக்குரிய தண்ணீரை ஐ.பெரியசாமி தனது விவசாய நிலத்திற்குப் பயன்படுத்தி வருகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. மற்றொருபுறம் விவசாயிகளும், பொதுமக்களும் கான்கிரீட் மூலம் போடப்பட்ட அந்த சிமெண்ட் தளத்தை உடைத்துத் தண்ணீரை திறந்து விடக் கோரி கறுப்புக் கொடி ஏந்தி தொடர் போராட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

"மூன்று தரப்பு விவசாயிகளுக்குமே பருவமழை காலங்களில் தண்ணீருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் இடைப்பட்ட காலங்களில் வரக்கூடிய தண்ணீரில் 20சதவீதம் மட்டும் அந்தத் தடுப்பணை போன்ற கற்களின் இடையே கசியும் நீர், அந்தப் பகுதிகளுக்குப் போகும். அதைத்தான் கடந்த 2014 -இல் இதே அ.தி.மு.க ஆட்சியில் எங்களது நரசிங்கபுரம் ராஜவாய்க்காலுக்கு சிமெண்ட் வாய்க்கால் அமைக்க கான்கிரீட் தளம் போடும்போதே, நாங்கள் போடக்கூடாது என்று கூறினோம். அதையும் மீறி பொதுப்பணித்துறை அதிகாரிகள் போட்டுவிட்டனர். அதனால்தான் இப்பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து, இரு தரப்பு விவசாயிகளும், பொதுமக்களும் போராடி வருகிறார்கள்.

அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். வேண்டுமென்றால், சிமெண்ட் வாய்க்கால் பகுதியிலிருந்து 20சதவீதம் தண்ணீர் தரத் தயாராக இருக்கிறோம். அதைவிட்டுவிட்டு, போட்ட சிமெண்ட் தளத்தை உடைக்க நினைத்தால், பிரச்சனைதான் எற்படும். இது முழுக்க முழுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளின் தவறே தவிர, ஐ.பெரியசாமிக்கு இதில் எந்தச் சம்மந்தமும் இல்லை. வேண்டுமென்றே இந்தப் பிரச்சனையில் அவரை இழுத்து அவதூறு பரப்பி வருகிறார்கள்" என்றார் சித்தயன்கோட்டை நஞ்சை, புஞ்சை பட்டாதாரிகளின் சங்கச் செயலாளரான செல்லமரக்காயர்.

இது சம்பந்தமாக ஆத்தூர் பகுதி பட்டாதாரி சங்க விவசாயியான சேசுராஜிடம் கேட்ட போது, "பாறை கற்களால் கட்டப்பட்ட அந்தத் தடுப்பணை மூலம் எங்களுக்கு 40சதவீதம் தண்ணீர் வந்தது. அதை அடைத்ததின் மூலம் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் தரிசாக உள்ளது. அதனால்தான் போட்ட கான்கிரீட் சிமெண்ட் தளத்தை உடைத்து, வழக்கம் போல் தண்ணிர் வரவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வருகிறோம்" என்று கூறினார்.


"ஆத்தூர் டேம் கட்டாதபோது, ஒட்டுமொத்த தண்ணீரும் கொடகனாற்றுக்குத்தான் வரும். அதன்மூலம், ஆத்தூர் முதல் வேடச்சந்தூர் வரை கிட்டதட்ட 25 கி.மீட்டருக்கு உள்ள விவசாய நிலங்கள் செழிப்பாகக் காட்சி அளித்து வந்தது. காமராஜர் காலத்தில் இந்த ஆத்தூர் டேம் கட்டும்போது, அந்தப் பெரிய கன்னிமார் கோவில், நீர் வரத்து ஓடையைத் திருப்பிவிட்டும், கற்களை வைத்தும் தடுப்பனை அமைத்து டேமை கட்டினார்கள். அதன்பிறகு அந்தத் தண்ணீரை முழுமையாக டேமுக்குத் திருப்ப முடியவில்லை. இருந்தாலும் பருவமழை காலங்களில் டேமுக்க அதிகமாக தண்ணீர் வரும். அந்தத் தண்ணீரைத்தான் கொடகனாறு ஆற்றுக்கும் திறந்துவிடுவார்கள். ஆனால், கடந்த 6 வருடங்களாகக் கொடகனாற்றில் தண்ணீரும் வருவதில்லை.

அதனால்தான், பீஸ் கமிட்டி கூட்டத்தில் நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் தண்ணீரை 15 நாட்களுக்குத் திருப்பிவிட வலியுறுத்தினோம். அதன் அடிப்படையில், ஆத்தூரிலிருந்து பாலராஜக்காப்பட்டி வரையுள்ள கொடகனாற்றை 70 இலட்சம் செலவில் ஐ.பெரியசாமி, தூர்வாரி கொடுத்தார். அதன்பிறகுதான் தண்ணீரும் வந்தது. அந்தத் தண்ணீரும் முழுமையாக வரவிடாமல், ஆளுங்கட்சியினர் தடுத்துவிட்டனர். அதனால்தான் இப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். எங்கள் போராட்டம் தொடரும். அதுபோல், அந்த கான்கிரீட் சிமெண்ட் தளத்தையும் உடைக்க வேண்டுமென்றார்" கொடகனாறு மீட்புக் குழுவைச் சேர்ந்த மைலாப்பூர் வேளாங்கண்ணி.

இது சம்பந்தமாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போதுதான், 110 விதியின்படி குடிமராமத்துப் பணிக்காக 9.45 கோடி ஒதுக்கி நரசிங்கபுரம் ராஜவாய்க்காலுக்கு சிமெண்ட் வாய்க்கால் கட்டப்பட்டது. அப்போது ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஆத்தூர் முன்னாள் சேர்மன் கோபி, ஒன்றியச் செயலாளர் பி.கே.டி.நடராஜன் உட்பட சில ஆளுங்கட்சியினர், அப்போது இருந்த உதவி செயற்பொறியாளர் தங்கவேலை தங்கள் அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொண்டனர். அதன்பேரில்தான், ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, எங்கள் அதிகாரி தங்கவேல் அந்தப் பகுதியில் கான்கிரீட் சிமெண்ட் தளம் போட்டுக்கொடுத்தார். அதனால்தான், தற்பொழுது தொகுதியில் இருக்கும் விவசாயிகளுக்கிடையே தண்ணீர் பிரச்சனை மூலம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. இதற்கு முழுப் பொறுப்பு பொதுப் பணித்துறைதான்" என்று கூறினார்.

"எனது தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக கலைஞர் ஆட்சியின்போது பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருப்பதால் பல திட்டங்களைச் செயல்படுத்த ஆளுங்கட்சி தவிர்த்து வருகிறது. இருந்தாலும் சட்டமன்ற உறுப்பினர் நிதி மற்றும் சொந்தப் பணத்தில் பல லட்சங்களைச் செலவு செய்து தொகுதி வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். அப்படி இருக்கும்போது என்னுடைய அரசியல் வளர்ச்சியைப் பொறுக்கமுடியாமல், ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்தச் சிக்கலை ஏற்படுத்திவிட்டனர்.

அதைத் தீர்த்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மூன்று தரப்பு விவசாயிகளை அழைத்துச் சென்று பலமுறை கலெக்டரை சந்தித்து அதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு கொடுங்கள் என வலியுறுத்தினேன். அதன்பேரில், குழுவை அமைத்து அந்தக் குழுவும் ஆய்வு செய்து வருகிறது. அப்படி இருக்கும்போது தொகுதி மக்களுக்கு, எள்ளளவுகூட நன்மை செய்யாத பி.ஜே.பி உள்ளிட்ட சில கட்சிகள் வேண்டுமென்றே என்மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, பிரச்சனைக்குரிய தண்ணீரை என் விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்தி வருவதாக எனது தொகுதி மக்களை தூண்டி விடுகிறார்கள்.

எனக்கு அந்த மூன்று பகுதியிலுமே ஒரு சென்டு நிலங்கூட இல்லை என்பதுதான் உண்மை. அப்படி அந்தத் தண்ணீரை எனது நிலத்திற்குப் பயன்படுத்தி வருவதை, யாராவது ஒருவர் நிரூபித்தாலும், அரசியலை விட்டே விலகத் தயார். இப்படியெல்லாம், அவதூறு பொய்ப் பிரச்சாரத்தைப் பரப்பி எனது தொகுதி மக்களைத் திசைதிருப்பி, அதன்மூலம் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். ஆனால், நான் எப்படிப்பட்டவன் என்று தொகுதி மக்கள் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் நன்றாகத் தெரியும் என்றார். ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி.

திண்டுக்கல் ஆட்சியர் விஜயலெட்சுமி

இது சம்பந்தமாக மாவட்ட கலெட்டர் விஜயலெட்சுமியிடம் கேட்டபோது, "இந்தப் பிரச்சனை சம்பந்தமாக பொதுப்பணித்துறை செயலாளருக்கு தெரியப்படுத்தியதன் பேரில், வல்லுநர் குழுவை அமைத்தனர். அந்தக் குழு ஆய்வு செய்துள்ளது. அதனுடைய அறிக்கை இன்னும் ஒருவாரத்தில் வந்துவிடும். அதன்பிறகு, இப்பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்" என்றார் உறுதியாக.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT