ADVERTISEMENT

“அதே உணர்வுடன் கோரிக்கை வைத்தேன்” - முதல்வர் நெகிழ்ச்சி

01:01 PM May 27, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

8 நாள் அரசு முறைப் பயணமாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்குச் சென்றுள்ளார். முதல்வரின் இந்த வெளிநாட்டுப் பயணத்தில், முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வரின் உதவியாளர் தினேஷ், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்வரின் செயலாளர்கள் உமாநாத், அனு ஜார்ஜ், தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், செய்தித்துறை இயக்குநர் மோகன் ஆகியோர் சென்றுள்ளனர். சிங்கப்பூரில் இருந்து தனது இரண்டு நாள் அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஜப்பான் நாட்டின் ஒசாகாவிற்கு புறப்பட்டுச் சென்றார்.

நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டின், ஒசாகா மாகாணத்தில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் ஏர் பேக் இன்பிளேட்டர் (Airbag Inflator) தயாரிப்பு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.விஷ்ணு, டைசல் நிறுவனத்தின் வணிக இயக்க பிரிவு தலைவர் இயக்குநர் கென் பாண்டோ ஆகியோர் கையெழுத்திட்டனர். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ் . கிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். மேலும் கென் பாண்டோவை சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் இன்று கொமாட்சு நிறுவனத்தின் ஒசாகா தொழிற்சாலையைப் பார்வையிட்டார். இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டதாவது, “ஜப்பான் என்றாலே புதுமையும் கண்டுபிடிப்புகளும்தான்! கட்டுமானம், சுரங்கம் போன்ற மிகக் கடுமையான மனித உழைப்பைக் கோரும் துறைகளில், பணிகளை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் செய்து முடித்திடும் கருவிகளை உற்பத்தி செய்யும் நூற்றாண்டு பழமையான கொமாட்சு நிறுவனத்தின் ஒசாகா தொழிற்சாலையைப் பார்வையிட்டேன்.

ஏற்கனவே கடந்த 2007-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கொமாட்சு தொழிற்சாலையை அமைச்சராகத் திறந்து வைத்த அதே உணர்வுடன், அந்நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று கோரி, அடுத்தாண்டு நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கும் அழைப்பு விடுத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT