ADVERTISEMENT

"உலகத் தரத்திலான உயர்கல்வி பெறவே நான் முதல்வன் திட்டம்” - அமைச்சர் சி.வெ.கணேசன் 

02:22 PM Jul 02, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 'கல்லூரி கனவு' எனும் பிளஸ் டூ மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கடலூர் கம்மியம்பேட்டை புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

இதில் அமைச்சர் கணேசன் பேசுகையில், "மாணவர்களின் வாழ்வில் பன்னிரண்டாம் வகுப்புக்குப் பின் அவர்கள் படிக்கும் உயர்கல்வி அவர்களது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்துகிறது. தமிழக முதலமைச்சரின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு, பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி தமிழக மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு உள்ள வாய்ப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பல்வேறு துறைகள் குறித்தும், வங்கி மற்றும் வங்கி கடன் பெறுதல் உள்ளிட்ட அறிவிப்பினை அனைவரும் பெறும் வகையிலும் தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.


மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள், வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெறும் வகையில் நான் முதல்வன் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 'நான் முதல்வன்' இணைய முகப்பில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும், நிறுவனங்கள் மூலமாக தரக்கூடிய 300க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த வழிகாட்டுதல்களும் இடம்பெற்றுள்ளன. நாடு முழுவதும் உள்ள 150க்கும் மேற்பட்ட உயர் கல்வி நிறுவனங்கள் வழங்கும் உதவித் தொகைகள் பற்றிய விவரங்களும் நான் முதல்வன் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.


மாணவர்களுக்கு இந்த தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே அனைவரும் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதலமைச்சரால் நான் முதல்வன் திட்டம் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வியை தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மாணவர்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT