ADVERTISEMENT

ரயில் நிலையங்களில் சுகாதாரமின்மை; துறை ரீதியான நடவடிக்கை வேண்டும்-நீதிமன்றம் அதிரடி!!

12:17 AM Sep 28, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரயில்களில் வழங்கப்படும் போர்வைகளை சுத்தப்படுத்தும் பணி தொடர்பான 14.83 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் ஒதுக்கியதை ரத்து செய்த சேலம் கோட்ட மேலாளர் உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை தி.நகரை சேர்ந்த பிரீமியர் கார்மெண்ட்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், டெண்டர் ஒதுக்கப்பட்ட 21 நாட்களில் பணிகள் தொடங்கப்படவில்லை என்ற காரணத்திற்காகவே டெண்டர் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்ததை ஏற்றும், மறு டெண்டர் நடைமுறை பங்கேற்கலாம் என்று அறிவுறுத்தியும் வழக்கை முடித்து வைத்துள்ளார்.

அந்த வழக்கில், ரயில் மற்றும் ரயில் நிலையங்கள் சுகாதாரமின்மை தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்ததுடன், நீதிபதி சில உத்தரவுகளையும் பிறபித்துள்ளார்.தெற்கு ரயில்வே பொது மேலாளர் அல்லது உயர் அதிகாரிகளின் அறைகள் உச்சபட்ச சொகுசுடனும், சுத்தத்துடனும் பராமரிக்கப்படும்போது, அதற்கு காரணமான பயணிகள் பயணிக்கும் ரயில்களை குறைந்தபட்ச சுகாதாரத்துடன் வைத்திருக்க வேண்டாமா? அவ்வாறு கிடைக்காதது அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லியுள்ள சுகாதார உரிமைகளுக்கு எதிரானதாகும்.

இந்திய ரயில்வே பல்வேறு விதிமுறைகளை உருவாக்கியுள்ள நிலையில், அவற்றை முழுமையாக அமல்படுத்தி ரயில், ரயில் நிலையங்களை சுகாதாரத்துடன் காக்க வேண்டிய கடமை அதிகாரிகளுக்குதான் உள்ளது. சுகாதாரமின்மைக்கு காரணமான அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.முதல் வகுப்பில் வழங்கப்படும் போர்வைகள், தலையணை ஆகியவை முறையாக சுத்தம் செய்யபடாமல் துர்நாற்றத்துடன் உள்ளது. சில ரயில் பெட்டிகளில் எலி, கரப்பான்பூச்சி ஆகியவை ஓடுகின்றன. ரயில்கள் சுத்தமாக இல்லை என ஏராளமான புகார்கள் வருவதாகவும், அவற்றில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.

அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாலும், ரயில் மற்றும் ரயில் நிலையங்களை முறையாக பராமரிக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை தெற்கு ரயில்வே பொது மேலாளர் எடுக்க வேண்டும்.

சுகாதாரம் இல்லாமல் இருக்கும் ரயில் மற்றும் ரயில் நிலையங்கள் குறித்து புகார் அளிக்க தனி தொலைபேசி எண்களை ஏற்படுத்தி, அதை முறையாக விளம்பரப்படுத்த வேண்டும். இந்த தொலைப்பேசி எண்களை ரயில் பெட்டிகளுக்கு உள்ளேயும், ரயில் நிலையங்களிலும் விளம்பரப்படுத்த வேண்டும்.

ரயில்வே அதிகாரிகள் பெறும் சலுகைகள், விளையாட்டு மைதானங்கள், கிளப்புகள் ஆகியவை பயணிகளின் மற்றும் வரி செலுத்துவோரின் பணத்தையும் கொண்டுதான் என்பதை உணர்ந்து அவர்களுக்கும் உரிய உரிமைகள் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரயில்வே ஊழியர் சங்கங்களும் தங்கள் கடமையை உணர்ந்தும், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும் தங்கள் சங்கத்தினருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். அடிக்கடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மக்களின் நலனையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

நாட்டிற்கு இந்திய ரயில்வேயின் பணியின் சேவை மிகப்பெரியது என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் பயணிகளுக்கு தேவையான சேவைகள் முழுமையாக கிடைப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.ஒருங்கிணைப்பு மற்றும் நேர்மையான அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுக்களை தெற்கு ரயில்வே பொது மேலாளர் உருவாக்கி, ரயில் மற்றும் ரயில் நிலையங்களின் சுகாதாரம், உணவு பாதுகாபு, பயணிகள் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பான உரிய உத்தரவுகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் பிறப்பிக்க வேண்டும்.

உத்தவுகளை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்வதற்காக வழக்கை 12 வாரம் கழித்து பட்டியலிடவும் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT