Skip to main content

சுவாதி கொலை வழக்கு... பெற்றோரின் இழப்பீடு மனு தள்ளுபடி!

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

Swathi case...Parents' compensation petition dismissed!

 

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரான சுவாதி கடந்த 2016 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 24-ம் தேதி, காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நுங்கம்பாக்கம் ஸ்டேஷனில் நடைபெற்ற இந்தச் சம்பவம், ஒட்டுமொத்த இந்தியாவின் மனசாட்சியையே உலுக்கியது. இதையடுத்து, சுவாதி கொலை வழக்கு தமிழக அரசியல் களத்திலும் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியது.

 

இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், தென்காசி மாவட்டம், மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவத்தின் மகன் ராம்குமார்தான் சுவாதியைக் கொலை செய்தார் எனத் தெரியவந்தது. இதையடுத்து, ராம்குமாரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். போலீசார் கைது செய்யச் சென்றபோது, ராம்குமார், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. இந்நிலையில், சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராம்குமார், பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சுவாதி கொலையில் ஆரம்பம் முதலே பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும் யாரோ ஒருவரை காப்பாற்றுவதற்காக ராம்குமார் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் என்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

 

இந்த நிலையில்தான், கடந்த 2016-ம் ஆண்டு, செப்டம்பர் 18-ம் தேதி, சிறையில் மின்சார வயரைக் கடித்து, ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தற்பொழுது வரை மர்மம் நீடிக்கும் இந்த சம்பவத்தில் சுவாதியை இழந்த பெற்றோர் தரப்பில் மூன்று கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையின் அலட்சியம் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே மூன்று கோடி ரூபாய் இழப்பீட்டை நீதிமன்றம் பெற்றுத்தர வேண்டும் என சுவாதியின் தாய் ரெங்கநாயகி தெரிவித்திருந்தார். இந்த வழக்கில், ரயில்வே பயணிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி வருகிறது. இது திட்டமிட்ட கொலை என ரயில்வே நிர்வாகம் பதிலளித்தது. இந்நிலையில் இழப்பீடு கோரி உரிமையியல் நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் சுவாதி பெற்றோரின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

வாக்களிக்கத் தயாரான மக்கள்; ரயில்வேயின் திடீர் அறிவிப்பால் அவதி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Suffering from the sudden announcement of the railway for assam People ready to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Suffering from the sudden announcement of the railway for assam People ready to vote

இதற்கிடையில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக அஸ்ஸாமுக்கு மற்றும் அங்கிருந்து செல்லும் பல ரயில்களை ரத்துசெய்து மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லை ரயில்வே அறிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் அஸ்ஸாமின் 5 தொகுதிகளில் இன்று (26-04-24) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், நேற்று (25-04-24) லும்டிங் பிரிவில் உள்ள ஜதிங்கா லம்பூர் மற்றும் நியூ ஹரங்காஜாவோ நிலையங்களுக்கு இடையே ரயில் தடம் புரண்ட சம்பவத்தின் காரணமாக பல ரயில்களின் நேரத்தை மாற்றியமைத்து ரத்து செய்ததாக வடகிழக்கு எல்லை ரயில்வே அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.

கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு நிமித்தமாக பிற மாநிலங்களுக்கு சென்று வாழும் அஸ்ஸாமிய மக்கள் இன்று ஓட்டு போடுவதற்காக தங்கள் சொந்த மாநிலமான அஸ்ஸாம் நோக்கி வர வார இறுதி விடுமுறையில் கிளம்ப இருந்த நேரத்தில் நேற்று (25-04-24) மாலை திடீரென்று அஸ்ஸாம் செல்லும் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரயில்வேயின் இந்த திடீர் அறிவிப்பால், பொதுமக்கள் பலரும் அவதியடைந்து வருகின்றனர். இதுபோன்ற முக்கியமான நாளில் வாக்காளர்கள், வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதைத் தடுக்கும் முயற்சியில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்த அறிவிப்புக்கு பின்னால் பா.ஜ.க.வின் சதி இருப்பதாகவும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.