ADVERTISEMENT

சொல் பேச்சு கேட்காததால் இரண்டாவது மனைவி அடித்து கொலை; கொல்லிமலையில் அருகே  பரபரப்பு

07:42 AM Aug 20, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கொல்லிமலை அருகே, சொல் பேச்சு கேட்காத இரண்டாவது மனைவியை உருட்டுக் கட்டையால்
அடித்துக் கொலை செய்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள வளப்பூர் நாடு அரசப்பட்டியைச் சேர்ந்தவர் கொங்கன் (வயது 60). விவசாயி. இவருக்கு இரண்டு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் வசிக்கின்றனர்.

கொங்கனின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர், தனது தோட்டத்தில் விளையும் காய்கறிகள், பழங்களை முள்ளுக்குறிச்சி சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தார்.

அவ்வாறு சென்று வந்தபோது, ராசிபுரம் அருகே உள்ள மலையம்பட்டியைச் சேர்ந்த மணி என்கிற தங்கமணி (வயது 50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரும் கணவரை இழந்து தனியாக வசித்து வந்ததால், அவரை திருமணம் செய்து கொள்ள கொங்கன் முடிவு செய்தார். அதன்படி, தங்கமணியை கொங்கன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

கொல்லிமலை அரசப்பட்டியில் இருந்து விளை பொருள்களை விற்பனைக்குக் கொண்டு செல்லும் போதெல்லாம் தங்கமணி, ராசிபுரத்திலேயே ஒரு வார காலம் தங்கியிருந்து விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இதையறிந்த கொங்கன், சந்தைக்குப் போனால் விளை பொருள்களை விற்பனை செய்து விட்டு உடனடியாக ஊர் திரும்ப வேண்டும் என்று பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் தங்கமணி, அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை. இது தொடர்பாக கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

ஆக. 18- ஆம் தேதி இரவும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கொங்கன், உருட்டுக் கட்டையால் தங்கமணியை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார். தகவல் அறிந்த வாழவந்திநாடு காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூராய்வுக்காக சடலத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, உள்ளூரில் ஒருவருடைய வீட்டில் பதுங்கி இருந்த கொங்கனை காவல்துறையினர் கைது செய்தனர். சொல் பேச்சு கேட்காமல் நடந்து கொண்டதால் மனைவியைக் கொலை செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் தங்கமணி, ராசிபுரத்தில் ஒரு வார காலம் தங்குவதை வழக்கமாக வைத்திருந்ததுதான் கொலைக்குக் காரணமா? அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT