ADVERTISEMENT

‘வீட்டுக்குள்ள எம்புட்டு நேரம்தான் முடங்கியே கிடக்கிறது?’ -வெளியே சுற்றினால் விபரீதம் காத்திருக்கிறது!

10:45 PM Mar 25, 2020 | kalaimohan

கரோனா வைரஸ் தொற்றால், உலகம் முழுவதும் கொத்துக்கொத்தாக உயிர்கள் மடிவது தெரிந்தும், ‘ரொம்ப போரடிக்கிறது’ என்ற மனப்புழுக்கத்தின் காரணமாக, ஊரடங்கு உத்தரவை மீறி சிவகாசி சாலைகளில் டூ வீலர்களில் ‘ரவுண்ட்’ அடித்த இளைஞர்களிடம் லத்தியை உயர்த்தி கடுமையாக எச்சரித்த காவல்துறையினர், அவர்களை வீடுகளுக்கு திருப்பி அனுப்பினார்கள்,

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூரிலோ, சாலையில் அங்கங்கே கூடி நின்றவர்கள் மீது ப்ளீச்சிங் பவுடர் கலந்த தண்ணீரை பீய்ச்சியடித்து துரத்தினர். அதனால் கோபமடைந்தவர்கள் நகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். ‘இந்த ஊருல யாருக்கு கொரோனா இருக்கு? நமக்கு ஒண்ணும் ஆகாது..’ என்ற அலட்சியமே, விடுமுறை கொண்டாட்ட மனநிலையால், வெளியில் தலைகாட்டுவதும் ஊர் சுற்றுவதுமாக உள்ளனர்.

சுப்பம்மாளுக்கோ, ‘வீட்ல இருந்து வெளியவந்து வாழை இலைகளையும், பழங்களையும் தன்கிட்ட யாராவது வாங்கிட்டு போகமாட்டாங்களா?’ என்ற பரிதவிப்பு வாட்டியது. காவல்துறையின் கெடுபிடியால், வழக்கமாக விற்கும் இடத்தில் கீரைக்கடை போட முடியாமல், ட்ரை-சைக்கிளை உருட்டி வந்து, நெருக்கடியான தெரு ஒன்றில் நிறுத்திவிட்டு, ‘கீரை..கீரை..’ என்று கூவ முடியாமல், கோவில்படிக்கட்டில் உட்கார்ந்திருந்தார், காளீ|ஸ்வரி.

சுப்பம்மாள் நம்மிடம் “இந்த ரோட்டுக்கடை வியாபாரத்துல மிஞ்சிப்போனா ஒரு நாளைக்கு இருநூறு முன்னூறுன்னு கிடைக்கும். இந்த ரெண்டு நாளா அதுக்கும் வழியில்லாம போச்சு. இந்த வரும்படிய வச்சித்தான் சீட்டுப்பணம் கட்டிட்டு வந்தேன்.. மூணு வாரம் கடை போட முடியாதுன்னா தாங்கமாட்டேன் சாமி.” என்றார் பரிதாபமாக.

காளீஸ்வரி யதார்த்தமாகப் பேசினார். “கொரனான்னா என்ன எழவுன்னே தெரியல. வந்தா செத்திருவோம்னு சொல்லுறாங்க. தெருவுல உட்கார்ந்து இந்தமாதிரி லோல் படறதுக்கு செத்தாகூட தேவல. ரேசன் கார்டுக்கு ஆயிரம்கிறது எந்த மூலைக்கு? சரி, கொடுக்கிறத வாங்கிக்க வேண்டியதுதான். பணக்காரங்களுக்கு, படிச்சவங்களுக்கு எல்லா வெவரமும் தெரியும். ஆனா.. எப்ப சாவோம்னு யாருக்கும் தெரியாது.

வெளிய போறப்ப முகமூடி போட்டுக்கன்னு என் பொண்ணு சொல்லுறா. வாழவேண்டிய நீ போட்டுக்கம்மான்னு சொன்னேன். அதுக்கு அவ, கொரோனா வந்து நாம மட்டும் செத்தா பரவாயில்ல. மத்தவங்களுக்கு பரப்பிடக் கூடாதுன்னு கோவிச்சுக்கிட்டா. எங்க வீட்ல இருக்கிறதே ஒரு முகமூடிதான். மருந்துக்கடைக்கு போயி இன்னும் ரெண்டு வாங்கிட்டு வரச் சொல்லிருக்கேன்.

அப்புறம் ஒரு விஷயம், எங்க வீட்டுக்கு எதிர்வீட்ல ஒரு குடும்பம். அந்த மனுஷன் எப்பவும் வீடு தங்க மாட்டாரு. இப்ப பார்த்தா.. வீட்டுக்குள்ள டிவி சவுண்ட கூட்டி வச்சு குதியாட்டம் போடறாரு. புள்ளைங்களும் அவருகூட சேர்ந்து ஆடுதாம். அந்த வீட்டுக்காரம்மா சொல்லிச் சொல்லி சிரிச்சாங்க. டிவில அந்த நாட்டுல அத்தனை பேரு செத்தாங்க. இந்த நாட்டுல இத்தனை பேரு குணமாயிருக்காங்கன்னு காட்டிக்கிட்டே இருக்காங்க. எங்கே பார்த்தாலும், உசிர கையில பிடிச்சிக்கிட்டு மக்கள் பயந்து கிடக்கிறாங்க. ஆனா.. எங்க எதிர்விட்டுக்காரங்க மாதிரி கொஞ்சபேரு இப்பத்தான் வாழ ஆரம்பிச்சிருக்காங்க.” என்று தத்துவம் பேசினார்.

கரோனா கொடியது என்றாலும், வாழ்வியலுக்கான அர்த்தத்தை சத்தமில்லாமல் பலருக்கும் கற்றுத்தந்த வண்ணம் உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT