ADVERTISEMENT

''இவரை சந்திக்காமல் எப்படி சென்னையை விட்டுச் செல்ல முடியும்'' - மம்தா பானர்ஜி பேட்டி

06:36 PM Nov 02, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சந்தித்தார். சென்னையில் உள்ள முதல்வரின் வீட்டில் இந்த சந்திப்பானது நடைபெற்றது. இந்த சந்திப்பிற்குப் பிறகு மேற்குவங்க முதல்வருடன் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பலமுறை சென்னைக்கு வந்திருக்கிறார். இன்னும் சிறப்போடு சொல்லவேண்டும் என்று சொன்னால் கலைஞருடைய திருவருட்சிலையை முரசொலி அலுவலகத்தில் அவர் திறந்து வைத்தது உள்ளபடியே எங்களைப் பெருமைப்படுத்தியது, கலைஞரைப் பெருமைப்படுத்தியது, திமுகவை, தமிழகத்தைப் பெருமைப்படுத்தியது. மேற்கு வங்க கவர்னராக இருக்கக்கூடிய இல.கணேசன் வீட்டில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிக்கு சென்னைக்கு வந்திருக்கும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்னுடைய இல்லத்திற்கும் வந்து என்னை சந்தித்துள்ளார். அதே சமயம் நீங்கள் மேற்கு வங்கத்திற்கு விருந்தினராக வரவேண்டும் என அழைத்திருக்கிறார்கள். அந்த அழைப்பை நானும் ஏற்றுக் கொண்டேன்'' என்றார்.

அப்பொழுது 'நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை திமுக தொடங்கி இருக்கிறது...' என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப முயன்ற நிலையில், குறுக்கிட்ட முதல்வர், '' இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் தேர்தல் சந்திப்பு அல்ல. அவரே இதைச் சொல்வார் என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, ''மு.க.ஸ்டாலின் சகோதரரைப் போன்றவர். அவரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. எங்கள் மாநில ஆளுநர் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டதால் அவருடைய குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ள சென்னை வந்துள்ளேன். ஆனால் ஸ்டாலினை சந்திக்காமல் எப்படி சென்னையை விட்டுச் செல்ல முடியும். அவரைச் சந்திப்பது என் கடமை எனவே அவரைச் சந்தித்து அவரின் குடும்பத்தாருடன் காபி அருந்தினேன்.” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT