ADVERTISEMENT

சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலையேற்றதால் வேதனை அடையும் ஹாலோ பிளாக் நிறுவனங்கள்!!

01:29 PM Jun 21, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தப்படும் சிமெண்ட்டால் ஆன கற்கள் ஜன்னல்கள், ஜாடிகள், பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பல உள்ளன. தற்போது கரோனா தொற்று பேரிடர் காலத்தினால் வேலை செய்ய முடியாமல், வருமானம் ஈட்ட முடியாமல் தவித்துவந்த உற்பத்தியாளர்களுக்கும் அவர்களைச் சார்ந்து வாழும் தொழிலாளர்களுக்கும் பேரதிர்வாக கட்டுமான மூலப்பொருட்களின் விலையேற்றத்தால் செய்வதறியாமல் திகைத்திருக்கின்றனர்.

ADVERTISEMENT

ஹாலோ பிளாக் உற்பத்திக்குத் தேவைப்படும் முக்கிய மூலப் பொருட்களில் ஒன்றான சிமெண்ட், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த விலையைவிட 80 ரூபாய் அதிகரித்து 460 ஆகவும், 6 ஆயிரத்திற்கு விற்ற 100 கிலோ கம்பி 7 ஆயிரம் ஆகவும், 8,500க்கு விற்ற 3 யூனிட் ஜல்லி 9,500 ஆகவும் விலை உயர்ந்துள்ளதால் சிறு, குறு தொழிலாக செய்துவந்த ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் இத்தொழிலைக் கைவிட்டுவிட்டதாக தெரிவிக்கின்றனர். மேலும், சில உற்பத்தியாளர்களின் கடன் சுமை, குடும்பத்தின் நிலைமை, இத்தொழிலை சார்ந்து வாழும் தொழிலாளர்களது குடும்பத்தின் நலனைக் கருதி, கடந்த ஒருமாத காலமாக பல்வேறு பண நெருக்கடியில் சிமெண்ட் பொருட்களைத் தயாரித்துவந்தாலும், மூலப்பொருட்களின் விலையேற்றத்தை சரிக்கட்டும் நோக்கத்தில், தயாரிக்கப்படும் சிமெண்ட் கற்களை மூன்று முதல் நான்கு ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு அப்பொருளை வாங்க வரும் ஏழை-எளிய மக்களான கிராமப்புற வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்ய முற்படும்போது, விலையேற்றம் குறித்து தெரிவித்தாலும், அப்பொருட்களை விற்பதற்குள் கடும் வாக்குவாதம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

அவர்களிடம் கட்டுமான மூலப்பொருட்களின் விலையேற்றத்தைப் பற்றி எடுத்துரைத்து விற்பனை செய்து வருவதுடன் வேதனையும் தெரிவிக்கின்றனர். மேலும், கடந்த ஒருமாத காலத்தில் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தால், வீடுகள் கட்ட வேண்டுமென்று நினைக்கும், கிராமப்புற ஏழை, எளிய மக்களின் கனவு நனவாகாமல்தான் போகும். பண்டைய காலங்களில் முன்னோர்கள் பயன்படுத்திய களிமண்ணால் ஆன வீடுகள், புளிக்கரைசலைப் பயன்படுத்தி மூங்கில் தட்டில் அமைத்த சுவர்களை எழுப்பி வாழலாம் என்று பொதுமக்களின் மனநிலை மாறக்கூடும் என்று தெரிவிக்கின்றனர். தங்கம் விலைபோல் உயர்ந்துவரும் கட்டுமானப் விளைபொருட்களின் விலையேற்றத்தை தமிழ்நாடு அரசு சரி செய்யுமா? செய்யாதா? என பல்வேறு கேள்விகளுடன் சிமெண்ட் கற்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் புதிதாக வீடு கட்டுபவர்கள் என பல்வேறு தரப்பினர் மன வேதனை அடைவதாக தெரிவிக்கின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT