ADVERTISEMENT

தந்தை மகனுக்கு ஒரேயிடத்தில் நடுகற்கள்...வரலாற்றாய்வாளர் தகவல்!!

10:47 AM Nov 14, 2019 | Anonymous (not verified)

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தேசூர் அருகில் கோட்டைப்பகுதி இருப்பதாகவும் அது தொடர்பாக தகவல்களைச் சேகரிக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி கூறியதன் அடிப்படையில், தேசூரைச் சேர்ந்த வருவாய் உதவியாளர் ஏ. வெங்கடேஷ் என்பவருடன் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச.பாலமுருகன், முனைவர் சுதாகர் ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


அங்கு பாழடைந்த நிலையில் ஒரு மசூதி போன்ற கட்டிடமும், அதன் அருகில் 5 நடுகற்களும் இருப்பது தெரியவந்தது. இவற்றில் 2 நடுகற்கள் 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டு எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இதுப்பற்றி, வரலாற்றறிஞர் முனைவர் அர.பூங்குன்றன் ஆய்வு செய்துவிட்டு இதன் முக்கியத்துவதைக் கூறிம்போது, "இரண்டு வரியுடைய இரண்டு நடுகல்லில் சீயமங்கலத்தில் எறிந்து பட்ட கொற்றம்பாக் கிழார் என்றும் மற்றொன்றில் சீயமங்கலத்தில் எறிந்து பட்ட கொற்றம்பாக் கீழார் மகன் சீலன் என்றும் குறிப்பிட்டுள்ளன. இதில் வீரனின் கையில் கத்தியும் கேடயமும் வைத்திருப்பது போன்ற அமைப்பில் சுமார் 4 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் காலத்தால் பிற்பட்ட மற்ற 3 நடுகற்களும் உள்ளன.

சீயமங்கலத்தில் பாணரைசரு ஆண்ட காலத்தில் கொற்றம்பாக் கிழார் அவ்வூரை தாக்கியிருக்க வேண்டும். இவர்களுக்கிடையே மாடுபிடி மோதலோ அல்லது ஊர்களுக்கிடையே மோதலோ ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவ்வாறு ஏற்பட்ட ஒரு பூசலில் மேற்குறிப்பட்ட கொற்றம்பாக்கிழாரும் அவருடை மகன் சீலனும் இறந்துவிட அவர்கள் நினைவாக இந்நடுகற்களை வைத்துள்ளனர்.

ஏற்கனவே இப்பகுதியில் சியமங்கலத்து பாணரைசர் என்ற வசாகத்துடன் ஒரு நடுகல்லை தாமரைக்கண்ணன் என்பவர் கண்டுபிடித்திருந்தார். இந்த நடுகற்களிலும் சீயமங்கலம் என வருவதால் இப்பகுதி பாணரைசர்கள் ஆண்ட பாணாடு ஆக இருக்கவேண்டும் என்றும் இது வடமொழியில் பாணராட்டிரம் என்று அழைக்கப்பட்து என்றும் இந்நாடு கடலூர் வரை பரவியிருந்தது என்றும் கருதலாம். மேலும் பாணர்களின் தலைவர்களில் ஒருவராக இந்த நடுகல்லில் குறிப்பிடும் கொற்றம்பாக்கிழார் இருந்திருக்க வேண்டும் என்றும் கொற்றம்ப என்பது தற்போதைய தேசூராக இருக்கலாம் என்றும் தேசு என்பதற்கு வெற்றி என்றும் பொருள் கொள்ளலாம்" என்றும் குறிப்பிட்டார்.


சீயமங்கலம் என்பது பல்லவர் கால குடைவரை உள்ள ஊர். இது தேசூருக்கு அருகில் 2. கி.மீ. தூரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வூரில் கிடைக்கப்பெற்ற இந்த நடுகற்களில் உள்ள கல்வெட்டுகள் மூலம் ஊரில் நடந்த பூசலில் தந்தையும் அவருடைய மகனும் இறந்ததின் நினைவாக எடுக்கப்பட்ட சிறப்பானதொரு நடுகல் ஆகும்.

தமிழகத்தில் கிடைத்த நடுகற்களில் தந்தை மற்றும் மகனுக்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் இதுவேயாகும். மேலும் இவ்விரு நடுகற்களும் தொண்டை மண்டலத்தில் கிடைத்த காலத்தால் முற்பட்ட எழுத்துடை நடுகற்கள் என்ற சிறப்பினையும் பெறுகின்றன. இந்த நடுகற்கள் இப்பகுதியின் வரலாற்றிற்கும் சிறந்த ஆதாரமாக திகழ்கின்றன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT