ADVERTISEMENT

விருத்தகிரீஸ்வரர் கோயில் முன்பு இருந்த ஆக்கிரமிப்பு கடைகள், கட்டடங்கள் அகற்றம்... அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை! 

02:08 AM Jul 16, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு தினமும் 4 கால பூஜை மற்றும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் போன்ற நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றுவருகிறது. மேலும், மாசிமகம் கோயிலின் ஆண்டுத் திருவிழாவாக 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பக்தர்களும் விருத்தகிரீஸ்வரர் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்கின்றனர். இதனால் கோயில்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தரிசனம் செய்வதற்கு இட வசதியின்றி பக்தர்கள் அவதிப்படுவதுடன், கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்தவும் இடவசதியின்றி சிரமப்படுகின்றனர்.

அதேசமயம் கோயிலின் நான்கு வீதிகள் மற்றும் கோயில் முன்வாயில் பகுதியில் கிழக்கு ராஜகோபுரம் எதிரே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை அகற்றுமாறு பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும் கடந்த 1993ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 5 தேர்களும் எரிந்து சாம்பலாகின. இதனால் தேர் நிறுத்தும் இடம் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக அருகில் உள்ள 32 கடைகளை அகற்றுவதற்கு கோயில் நிர்வாகம் கடந்த 2018ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை ஆணைய நீதிமன்றம் சென்னை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணைய நீதிமன்றம் விழுப்புரம் ஆகிய 2 நீதிமன்றங்களும் கோயில் எதிரே தேரடி அருகிலுள்ள 32 கடைகளையும் அகற்ற உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.

அதன் அடிப்படையில் நேற்று (15.07.2021) 32 கடைகளை அகற்றுவதற்கு கோயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதில் 9 கடைகள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், மீதமுள்ள 23 கடைகளை அகற்றும் பணியில் இந்து சமய அறநிலைத்துறை கடலூர் உதவி ஆணையர் பரணிதரன் தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆக்கிரமிப்பாளர்களிடம், தாங்களாக கடைகளைக் காலி செய்துகொள்ள வேண்டும் என எச்சரித்தும், அவர்கள் காலி செய்யாமல் அலட்சியம் காட்டிவந்தனர். மேலும் காலி செய்வதற்கு சில நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டனர். ஏற்கனவே பலமுறை அவர்களுக்கு கால அவகாசம் கொடுத்தும் காலி செய்யவில்லை. அதனால் இந்தமுறை கால அவகாசம் எதுவும் கிடையாது என கூறி அதிரடியாக கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கடையின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் டி.எஸ்.பி மோகன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் கடைகள் இடித்து அகற்றப்பட்டன. விருத்தாசலம் தாசில்தார் சிவக்குமார், கோயில் செயல் அலுவலர்கள் விருத்தாசலம் முத்துராஜா, மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில் மாலா மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களின் செயல் அலுவலர்கள் முன்னிலையில் கடைகளை அகற்றும் பணி நடைபெற்றது.

உதவி ஆணையர் பரணிதரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கோயிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்குப் பலமுறை நோட்டீஸ் கொடுத்தும் அவர்கள் கடைகளைக் காலி செய்ய மறுத்ததன் பேரில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதன்படி வழக்கு கோயிலுக்கு சாதகமாக 32 கடைகளை அகற்றுவதற்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், ஆணையர் மற்றும் இணை ஆணையர் ஆகியோர் ஒத்துழைப்போடு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், படிப்படியாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபடும். தற்போது வழக்குகள் அனைத்தும் முடிவான பின்பு மீதமுள்ள கடைகள் அகற்றப்படும். அதுபோல் கோயிலின் நுழைவாயில் முன்பு அசைவ உணவுகள் தயாரிக்கும் ஓட்டல்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இது சம்பந்தமாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கின் முடிவு வந்த பிறகு அந்த நடவடிக்கையில் ஈடுபடுவோம்" எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT