ADVERTISEMENT

இஸ்லாமியர்களின் சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்துக்கு தடை!

09:22 PM Feb 18, 2020 | kalaimohan

குரியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ள சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி, இஸ்லாமிய கூட்டமைப்பினர், நாளை சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு தடை விதிக்ககோரி, இந்திய மக்கள் மன்ற தலைவர் வராகி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ADVERTISEMENT

அந்த மனுவில், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள், ஏற்கனவே சட்டவிரோதமாக சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், நாளை அறிவித்துள்ள முற்றுகை போராட்டங்கள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், சட்ட ஒழுங்குக்கும் பாதிப்பை ஏற்படுத்த வாய்புள்ளதால், தலைமைச் செயலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால் எந்த ஆட்சேபனையும் இல்லை. காவல்துறையின் அனுமதி கோரி அவர்கள் அளித்த விண்ணப்பமே போராட்டம் அமைதியான முறையில் இருக்காது என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

சென்னை மாநகர காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், அமைதியான முறையில் போராட்டம் நடத்த முன்வந்தால், அதற்கு அரசு உரிய நிபந்தனையுடன் அனுமதி அளிக்கத் தயாராக உள்ளதாகவும், அதே நேரத்தில் இந்த வகையான முற்றுகை போராட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதி அளிக்க முடியாது எனவும், முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி கோரி நேற்றுதான் மனு அளித்ததாகவும், அந்த மனு காவல்துறையால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அனுமதியை மீறி சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை அனுமதிக்க முடியாது எனவும் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சட்டப்படி ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனும் நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்தான் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டி, காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் அறிவித்துள்ள சட்டவிரோத முற்றுகை போராட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த மனு குறித்து மத்திய மாநில அரசுகள், தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர், வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 12-க்கு தள்ளிவைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT