ADVERTISEMENT

வரம்பு மீறும் வழக்கறிஞர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென பார்கவுன்சில் அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு..!  

05:26 PM Jun 15, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


வரம்பு மீறி செயல்படும் வழக்கறிஞர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் அறிக்கை அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னை சேத்துபட்டு சிக்னலில் போக்குவரத்து காவலர்கள் கரோனா ஊரடங்கின்போது கடந்த 6ஆம் தேதி (ஜூன் 6) வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த கார் ஒன்றை வழி மறித்து விசாரணை செய்தனர். காரை ஓட்டிவந்த சட்டப்படிப்பு படிக்கும் மாணவி பிரீத்தி ராஜனிடமிருந்து ஓட்டுனர் உரிமத்தைப் பெற்று கரோனா விதிகளுக்குப் புறம்பாக வெளியில் சுற்றியதாக அபராத ரசீதைக் கொடுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த அந்தப் பெண், நடந்த விஷயத்தை வழக்கறிஞரான தன் தாயிடம் கூறி அங்கு வரவழைத்துள்ளார்.

அங்குவந்த அவரது தாயாரும் வழக்கறிஞருமான தனுஜா ராஜன், முகக் கவகவசம் இல்லாமல் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ரசீதை வீசி எறிந்து இருவரும் கிளம்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனையடுத்து, தலைமைக் காவலர் ரன்ஜித் குமார் அளித்த புகாரில் இருவர் மீதும் சேத்துப்பட்டு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர். கொலை மிரட்டல் விடுவது, அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுப்பது, பேரிடர் மேலாண்மை சட்டப் பிரிவையும் சேர்த்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தாய், மகள் இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.


இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு இன்று (15.06.2021) விசாரணைக்கு வந்தது. கரோனா காலத்தில் மருத்துவர்கள், காவல்துறையினர் என முன்களப்பணியாளர்கள், உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிவருவதாகவும், அனைவரும் கரோனா பயத்தில் ஊரடங்கு நேரத்தில் இருக்கும்போது வழக்கறிஞருக்கு என்ன வேலை என்றும் கண்டனம் தெரிவித்தார். முன்ஜாமீன் அளித்தால் அரசு மருத்துவமனைக்கு நிவாரண நிதியாக லட்சம் ரூபாய் தரமுடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் இந்த வழக்கில் தமிழ்நாடு பார் கவுன்சிலைப் பிரதிவாதியாக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி, வரம்பு மீறி செயல்படும் வழக்கறிஞர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கு விசாரணை நாளை மறுதினத்திற்குத் (ஜூன் 17) தள்ளிவைத்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT