ADVERTISEMENT

அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கை 12 வாரத்தில் முடிக்க சி.பி.சி.ஐ.டிக்கு உத்தரவு!

06:47 PM Sep 25, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

என்கவுண்டர் செய்யப்பட்ட அயனாவரம் ரவுடி சங்கரின் உடலை, மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், என்கவுண்டர் வழக்கை 12 வாரத்தில் முடிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டுள்ளது.

ரவுடி சங்கர், அயனாவரம் காவல் நிலையத்தினரால் ஆகஸ்ட் 21-ஆம் தேதி என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி அல்லது சி.பி.ஐ விசாரணை கோரியும், மறு பிரேதப் பரிசோதனை கோரியும், தாயார் கோவிந்தம்மாள் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதன்பின்னர், அயனாவரம் காவல் நிலைய வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், தற்காப்புக்காக சுட்டதாகத் தெரியவில்லை என்றும், ஆய்வாளர் நடராஜன் நடத்திய திட்டமிட்ட படுகொலை எனவும், பிரேதப் பரிசோதனையின்போது தங்கள் தரப்பில் யாரையும் அனுமதிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டது.

அரசுத் தரப்பில் ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும், மனித உரிமை ஆணைய வழிகாட்டுதல்படியே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், மறுபிரேதப் பரிசோதனை செய்ய எவ்வித காரணமும் இல்லை எனக்கூறி அதை நிராகரித்தார். அதேவேளையில், என்கவுண்டர் வழக்கு விசாரணையை 12 வாரத்தில் நடத்தி முடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.சி.ஐ.டிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT