ADVERTISEMENT

இசைக்கருவிகளுக்கு வரிவிலக்கு கோரிய நிறுவனத்தின் மனுவைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

04:54 PM Sep 09, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நலிவடைந்தவர்களையும், ஏழைகளையும் மேம்படுத்துவதற்காகத்தான் வரிவிலக்கு இருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைந்திடக் கூடாது என வலியுறுத்தி உள்ளது. ராடெல் (Radel) எலக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனம் தாக்கல் செய்துள்ள வழக்கில், இந்திய இசைக் கருவிகளுக்கு வரி விலக்கு அளிக்கும் அரசாணைப்படி, தங்கள் நிறுவன தயாரிக்கும் கருவிகளுக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்திருந்தது. வரி விலக்கு அளிக்க மறுத்த வணிக வரித்துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் பி.வி.அனுராதா ஆஜராகி இந்திய இசைக் கருவிகளுக்கு விலக்கு என அறிவித்த தமிழ்நாடு அரசு, மின்னணு முறையில் உற்பத்தியாகும் தங்கள் நிறுவன இசைக் கருவிகளுக்கு வரிவிலக்கு வழங்க மறுக்க முடியாது என வாதிட்டார். தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர் வி.நன்மாறனும் ஆஜராகி, தலைமுறை தலைமுறையாக இசைக்கருவிகளைத் தயாரிக்கின்ற, ஏழ்மை நிலையில் இருக்கின்ற கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவே வரிவிலக்கு வழங்கப்படுவதாகவும், மின்னணு முறையில் இயங்குகின்ற இசைக்கருவிகளுக்கு வழங்க முடியாது எனத் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழ்நாடு ஜி.எஸ்.டி. சட்டத்தில் வீணை, வயலின், கடம், மிருதங்கம், தவில், மகுடி, பஞ்சலோக வாத்தியம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை விற்பனை செய்யும்போது வரிவிலக்கு அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, வரிவிலக்கு கோரிய நிறுவனத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

மேலும் வரிவிலக்கு என்பது சலுகை மட்டுமே என்றும், விதிகளுக்கு உட்பட்டு அளிக்கப்படும் அந்த சலுகையை உரிமையாகக் கோரமுடியாது என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். வரிவிலக்கு அளிப்பதை வழக்கமாகப் பின்பற்றினால், பெரிய அளவிலான உற்பத்தியாளர்கள் அதிக லாபம் ஈட்ட வகை செய்துவிடும் என அறிவுறுத்தி உள்ளார். விலைவாசியால் பாதிக்கப்பட்டவர்களையும், நலிவடைந்தவர்களையும், ஏழை மக்களையும் மேம்படுத்துவதற்காக மட்டுமே வரிவிலக்கு அமைய வேண்டுமே தவிர, அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைந்திடக் கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT