ADVERTISEMENT

ஊராட்சித் தலைவர் நியமன வழக்கை முடித்துவைத்த உயர் நீதிமன்றம்..! 

12:49 PM Apr 20, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர், குமளங்குளம் கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற ஜெயலட்சுமி பதவியேற்பதற்கான நடைமுறைகளை இரண்டு வாரத்தில் முடிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்த தேர்தலில், குமளங்குளம் கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஜெயலட்சுமி என்பவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட விஜயலட்சுமி என்பவரை விட 1,034 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.

ஆனால், வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு இருவரும் பெற்ற வாக்குகளுடன் சின்னத்தைக் குறிப்பதில் குளறுபடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சில மணி நேரங்களில், விஜயலட்சுமி வெற்றிபெற்றதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதை எதிர்த்து ஜெயலட்சுமியும், பதவி ஏற்க அனுமதிக்க வேண்டும் என விஜயலட்சுமியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அதிக வாக்குகள் பெற்றதாக முடிவெடுக்கப்பட்ட ஜெயலட்சுமியை ஒரு வாரத்தில் தலைவராக அறிவிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரரேஷ், மஞ்சுளா ஆகியோர் அமர்வில் இன்று (20.04.2021) விசாரணைக்கு வந்தது. அப்போது, தடையை நீக்க கோரி ஜெயலட்சுமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் அலுவலரான கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சின்னம் மாற்றி குறித்ததால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாகவும், ஜெயலட்சுமி வெற்றிபெற்றதாக அவர் அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து குமளங்குளம் ஊராட்சியின் தலைவராக ஜெயலட்சுமி வெற்றி பெற்றார் என அறிவிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டதுடன், 2 வாரத்தில் அவர் பதவியேற்பதற்கான நடைமுறைகளை முடிக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT