
கடலூர் மாவட்டம் நைனார் குப்பம் பஞ்சாயத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கு பட்டா வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்ற வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நைனார் குப்பம் பஞ்சாயத்து தலைவரின் செயல் வேதனையைத் தருகிறது. அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி பஞ்சாயத்துத் தலைவர் மோகன் இன்று உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், தெரியாமல் இந்த தீர்மானத்தை நிறைவேற்றி விட்டதாகவும் வருத்தம் தெரிவித்தார். அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை நாளை மறு தினத்திற்கு ஒத்தி வைத்தார். இந்த வழக்கில் நாளை மறுதினம் உத்தரவு பிறப்பிக்க இருப்பதாகத் தெரிவித்தார். அதேசமயம், ‘மூன்றாம் பாலினத்தவருக்கு எதிரான செயல்கள் சமுதாயத்தில் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மூன்றாம் பாலினத்தவரை வேற்றுமைப்படுத்தி காட்டக் கூடாது. இது சமூகத்தில் வேற்றுமை ஏற்படுத்தும். சமூகத்தில் அனைவரும் சமமானவர்கள் என்பதை உணர வேண்டும். அவர்களுக்கு எதிரான நிகழ்வுகள் நிகழ்த்தப்படுவதை தடுக்க வேண்டும்' என நீதிபதி கருத்து தெரிவித்தார்.