ADVERTISEMENT

தலைமை ஆசிரியர் மாற்றுப் பள்ளிக்கு செல்லக்கூடாது... கதறி அழுத மாணவர்கள், பெற்றோர்கள்...

06:11 PM Jul 10, 2019 | kalaimohan

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ளது மாங்குடி கிராமம். 15 ஆண்டுகளுக்கு முன்பு 2004 ம் ஆண்டு அந்த ஊர் நடுநிலைப் பள்ளிக்கு தலைமை ஆசியராக பணிக்கு வந்தார் ஆசிரியர் ஜோதிமணி. அவர் வரும்போது தமிழகத்தில் உள்ள சராசரி அரசுப் பள்ளிகளில் ஒன்றாக மாங்குடி நடுநிலைப் பள்ளியும் இருந்தது.

ADVERTISEMENT

அதன்பிறகு அவரது சொந்த முயற்சியில் பள்ளியை தரமாக்குவதுடன் மாணவர்களை சிறந்த மாணவர்களாக செதுக்க வேண்டும் என்ற அவரது ஆசைக்கு சக ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஒத்துழைப்பு கொடுத்ததுடன் வேண்டிய உதவிகளையும் செய்ய முன்வந்தனர். மாணவர்கள் தங்களை வளமாக்கி சிறந்த மாணவர்களாக உருவாக்கிக் கொள்ள தலைமை ஆசிரியருடன் பயணித்தனர்.

ADVERTISEMENT

அதன் விளைவு.. உள் கட்டமைப்பு, பள்ளி வளாகத்தில் முதலில் மாற்றம் கொண்டு வந்தவர் வகுப்பறைகளில் குடிதண்ணீர், தபால் பெட்டி, என்ற உள்கட்டமைப்புகளிலும் மாற்றத் தொடங்கினார். படிப்படியாக மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் எழுத்துப் பயிற்சி, கணினி வழிக்கல்வி, ஸ்மார்ட் வகுப்பறைகள், அனைத்து வகுப்பறைகளுக்கும் ஏ.சி, இப்படி பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை நுழைத்து வகுப்புகளை நடத்தினார். ஒவ்வொரு நாளும் ஒரு மன்றத்தின் நிகழ்ச்சி, பாடச் சுமையை குறைக்க பள்ளி வகுப்பறைகளில் அலமாரிகள், இப்படி வேகமாக வளர்ந்த பள்ளியை நக்கீரன் வெளி உலகிற்கு கொண்டுவந்தது.

கடந்த ஆண்டு தமிழக அரசு புதுமைப் பள்ளி விருது, கனவு ஆசிரியர் விருதுகளை அறிவித்தபோது விண்ணப்பமே செய்யாமல் நக்கீரன் இணையச் செய்தியை பார்த்து கல்வித்துறை மாங்குடி பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணியை நேரில் அழைத்து விருது வழங்கி கௌரவப்படுத்தியது. ஆனால் கஜா புயல் பள்ளி வளாகத்தை அப்படியே மாற்றிப் போட்டது. சோலையாக இருந்த மரங்கள், செடிகொடிகள் காணாமல் போனது. சளைத்துவிடவில்லை தலைமை ஆசிரியரும் சக ஆசிரியர்களும் சில மாதங்களில் அப்படியே அனைத்தையும் மாற்றிக் காட்டினார்கள்.

இந்திய, தமிழக அரசுகள் கல்வியில் என்ன புதுமை செய்ய வேண்டும் என்று நினைக்கிறதோ அனைத்தையும் இந்த மாங்குடி பள்ளி பல வருடங்களுக்கு முன்பே செய்து காட்டிவிட்டது. இந்நிலையில் தான் செவ்வாய் கிழமை நடந்த தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் தலைமை ஆசிரியர் ஜோதிமணி பச்சலூர் நடுநிலைப் பள்ளிக்கு இடமாற்றம் பெற்று இன்று புதன் கிழமை மாங்குடி பள்ளிக்கு வந்த போது மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் கதறிக் கதறி அழுதனர்.

பள்ளியை விட்டு போகவேண்டாம் என்று காலைப் பிடித்து கெஞ்சினார்கள். நா தழுதழுக்க மற்றொரு நல்ல தலைமை ஆசிரியர் வருவார் பள்ளியை சிறப்பாக செயல்படுத்துவார் என்று சொன்னாலும் யாரும் கேட்கவில்லை. மீண்டும் பள்ளிக்கு வர வேண்டும். வரவில்லை என்றால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று பெற்றோர்கள் சொல்லிச் சென்றுவிட்டனர்.

தஞ்சாவூரு மண்ணு எடுத்து.. என்ற பாடல் வரிகளை பாடி.. இப்ப கொஞ்சம் கொஞ்சமாக பார்த்து பார்த்து வளர்த்த பள்ளிக் கூடம் அதை அப்படியே கொண்டு போங்க என்று சக ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் கூறினார். மாணவர்கள் நம்மிடம்.. எங்க பள்ளியை புதுமைப் பள்ளியாக மாற்றியதும், எங்களை எல்லா துறையிலும் சிறந்தவர்களாக மாற்றியதும் தலைமை ஆசிரியர் சார் தான். இப்ப அவரே இங்கிருந்து போக நாங்க இந்த வருசத்தோட பள்ளி படிப்பையே முடிச்சுக்கிறோம். மறுபடியும் சார் வரலன்னா நாங்க பள்ளிக் கூடத்துக்கு வரமாட்டோம் என்று கதறியவர்கள் தலைமை ஆசிரியர் இல்லாத இருக்கை அருகே கண்ணீரோடு அவர் வாங்கி குவித்த விருதுகளை எடுத்துப் பார்த்து கலங்கினார்கள்.

பள்ளிக்கு வந்த பெற்றோர்.. எங்க ஊர் மாங்குடி என்பது ஒரு குக்கிராமம். அந்த கிராமத்தை இந்திய மட்டுமல்ல உலகம் முழுவதும் தெரிய வச்சது ஜோதிமணி சார். எங்க குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்கிய தலைமை ஆசிரியரை இந்த ஊரைவிட்டு போகவிடமாட்டோம் என்றனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி.. இந்த பள்ளிக்கு வந்து 15 வருடங்கள் கடந்துவிட்டது. ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டுமோ அத்தனை பணிகளையும் செய்து முடித்துவிட்டேன். எல்லாவற்றுக்கும் சக ஆசிரியர்கள், கிராமத்தினர், முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். மாணவர்கள் ரொம்ப நல்லவர்களாக இருக்கிறார்கள். எங்க பள்ளி மாணவர்கள் எங்கே போனாலும் பிழைத்துக் கொள்வார்கள் அந்த அளவிற்கு உருவாக்கிவிட்டோம். இனியும் அதை செய்வார்கள் சக ஆசிரியர்களும், மாணவர்களும் பெற்றோர்களும் என்ற நம்பிக்கை உள்ளது. விரைவில் உயர்நிலைப் பள்ளியாக போகிறது. அதனால்தான் தற்போது இடமாறுதல் பெற்று செல்கிறேன். நான் பணி ஏற்க போகும் பச்சலூர் அரசுப் பள்ளியையும் இதே போல விரைவில் உருவாக்குவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என்று சொல்லிவிட்டு பள்ளிக்கு வெளியே வந்து பள்ளி முன்பு தரையில் விழுந்து வணங்கினார். அப்போது ஒட்டுமொத்த ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கதறி விட்டனர்.

இப்படி ஒரு ஆசிரியரை பெற அவர் செல்லும் பள்ளி கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT