ADVERTISEMENT

14 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரைக் குடும்பத்துடன் இணைத்த காவலர்...

04:35 PM Jul 20, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி அருகே 14 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவரை ஒரு காவலர் மீட்டு குடும்பத்தினருடன் இணைத்து வைத்துள்ளார்.

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னான் (55). இவர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள், உடல்நிலை சரியில்லாமல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தனது மனைவி மணியை பார்ப்பதற்காக, மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஆனால் இவர் வருவதற்கு முன்பே இவரது மனைவி மணி டிஸ்சார்ஜ் ஆகி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சென்று விட்டார். மருத்துவமனைக்கு வந்த சின்னான் மருத்துவமனையில் மனைவியை தேடிப் பார்த்துள்ளார் மனைவியைக் காணாத ஏக்கத்தில் அவருக்கு மன நிலை பிறழ்வு ஏற்பட்டிருக்கிறது.

மனநிலை மாறிவிட்டதால் தன்வீட்டிற்கு திரும்பி செல்லாமல் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கூகையூர் இப்படி பல்வேறு ஊர்களில் கடந்த 14 ஆண்டுகளாக அலைந்து திரிந்துள்ளார். பரிதாபப்பட்டு யாராவது சிலர் கொடுக்கும் உணவை உண்டும், இரவு நேரத்தில் கிடைத்த இடத்தில் தங்கியும் இருந்துள்ளார்.

இந்தநிலையில் கரோனா ஊரடங்கை முன்னிட்டு, கூகையூர் அருகே உள்ள ஆற்றுப்பாலத்தில் கீழ்குப்பம் உதவி ஆய்வாளர் ஏழுமலை, தலைமை காவலர் கருப்பையா மற்றும் காவலர்கள் தினசரி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த சின்னானை பார்த்த தலைமை காவலர் கருப்பையா, இறக்கப்பட்டு சாப்பாடு, துணிமணிகள் என அவ்வப்போது வாங்கி கொடுத்து உதவி செய்து வந்துள்ளார். அப்போது சின்னானிடம், அவரது குடும்ப விவரங்கள் பற்றி கேட்டபோது சின்னானுக்கு விவரம் சொல்லத் தெரியவில்லை. இதை அடுத்து தலைமை காவலர் கருப்பையா, சின்னானுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்து அதை வாட்ஸ்அப் குரூப்பில் பதிவு செய்து சின்னான் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு தமது செல்போன் எண்ணையும் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த சின்னானின் உறவினர்கள், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் உடனடியாக கீழ்குப்பம் காவல் நிலையம் வந்தனர். அவர்கள் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஏழுமலையிடம் நடந்த சம்பவங்களைக் கூறினார்கள். வாட்ஸ்-அப்பில் பதிவு செய்துள்ள போட்டோவில் இருப்பது சின்னான் என்பதை உறுதி செய்தனர்.

சின்னானை அவரது மனைவியிடம் நேரில் காண்பித்தனர் காண்பித்தனர். அவரைப் பார்த்ததும் அவரது மனைவியும், மகளும் கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தனர். மேலும் கணவரைக் கண்டுபிடித்து மீட்ட தலைமை காவலர் கருப்பையாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

14 ஆண்டுகளாக பல்வேறு ஊர்களில் சுற்றி திரிந்த சின்னானை அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த பெருமை தலைமை காவலர் கருப்பையாவுக்கே சேரும் என்கிறார்கள் சக காவலர்கள். தனது மனைவி மகளைப் பார்த்ததும் அவர்களை அடையாளம் கண்டுகொண்ட சின்னானின் மனம் தெளிவு பெற்றதாகவும் கூறுகின்றனர். மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த ஒருவரை மனித நேயத்தோடு உதவிகள் செய்து அவர் குடும்பத்தினருடன் சேர்வதற்கு உதவியாக இருந்த தலைமை காவலர் கருப்பையாவுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT