Husband arrested in wife death case

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகில் உள்ள குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயராஜ்(30). கார் டிரைவரான இவர், அதே பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவி மேனகா(20). இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. இந்தநிலையில், இவர்களுக்குள் கடந்த ஒரு மாதமாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

Advertisment

இந்த நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் விஜயராஜ் மது போதையில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஜயராஜ், அருகில் இருந்த பிளாஸ்டிக் பைப்பை எடுத்து மேனகா மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே மேனகா உயிரிழந்துள்ளார். இதுகுறித்த தகவல் அரிந்த அக்கம்பக்கத்தினர் மணலூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் பாபு, உதவி ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் போலீசார் மேனகாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேனகாவை கொலை செய்த அவரது கணவர் விஜயராஜை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் விஜயராஜ், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சீர்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை முதலாவதாக திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து தனி தனியாக வாழ்ந்து வருகின்றனர். அதன்பிறகு வடகரை தாழனூர் கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அந்தப் பெண்ணுடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரும் தற்போது விஜயராஜை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். முதல் மற்றும் இரண்டாவது மனைவி இருவருக்கும்குழந்தைகள் ஏதும் இல்லை.

இந்த நிலையில்தான், குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தணிகைமலை என்பவரது மகள் மேனகாவை(20) மூன்றாவதாக விஜயராஜ் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதில் மனைவியை அவர் கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.