ADVERTISEMENT

ஆட்டோ டிரைவரின் சாதுரியத்தால் போலீசிடம் சிக்கிய ஹவாலா பணம்

11:56 AM Nov 25, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (39). இவர் மாதவரம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில், நேற்று (24-11-23) அதிகாலை 4 மணி அளவில் 3 பேர் சவுகார்பேட்டை செல்வதற்காக இவரது ஆட்டோவில் ஏறினர். அப்போது, ஆட்டோவில் சவாரி செய்த 3 பேரும் அவர்களுக்குள் பேசி வந்துள்ளனர். இவர்களது பேச்சைக் கேட்டு சந்தேகமடைந்த ஆட்டோ டிரைவர் சுந்தர்ராஜ், ஆட்டோவை நேராக யானைக்கவுனி காவல் நிலையத்துக்கு ஓட்டிச் சென்றார்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த போலீசாரிடம், தனது ஆட்டோவில் சவாரி செய்த 3 பேர் மீது சந்தேகமாக உள்ளது என சுந்தர்ராஜ் கூறினார். அதன்படி, போலீசார் ஆட்டோவில் இருந்த 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர்கள் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த யாசின் (24), தாவூத் (20), பைசூலா (28) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் மூன்று பேரும் ஆந்திராவில் இருந்து மாதவரத்துக்கு காரில் வந்துள்ளனர். அதன்பின், சுந்தர்ராஜ் ஆட்டோவில் சவுகார்பேட்டை செல்வதற்காக சவாரி செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் அவர்களிடம் இருந்த பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக ரூ.2 கோடியே 1 லட்சம் பணம் இருந்ததைக் கண்டு 3 பேரிடம் மேலும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், அந்த பணத்தை அவர்களது முதலாளி கொடுத்து அனுப்பியதாகவும், சவுகார்பேட்டையில் உள்ள ஒருவரிடம் அந்த பணத்தை கொடுத்து அதற்குப் பதிலாக தங்க நகைகள் வாங்கி வரும்படி கூறி அனுப்பியதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த பணத்துக்காக உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாத காரணத்தால் பணம் மற்றும் 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT