ADVERTISEMENT

சோதனைச் சாவடி நுழைவுக் கட்டணம் கையாடல்; பணியாளர் டிஸ்மிஸ்

07:21 PM Mar 25, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் பயணிக்க வனத்துறை சார்பில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்திலிருந்து கர்நாடக மாநிலம் செல்லும் வாகனங்களுக்கு பண்ணாரி வன சோதனைச் சாவடியிலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி வரும் வாகனங்களுக்கு ஆசனூர் அருகே காரப்பள்ளம் வன சோதனைச் சாவடியிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த வாகனங்களுக்கு முறையே கட்டணமாக ரூ. 20 முதல் ரூ. 50 என வசூலிக்கப்பட்டு புலிகள் காப்பக அறக்கட்டளை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு சோதனைச் சாவடிகளும் முக்கிய போக்குவரத்து பகுதியாக விளங்கி வருகிறது. இங்கு நாளொன்றுக்கு 750 முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் ஆசனூர் வனச்சரக அலுவலகத்தில் தற்காலிகப் பணியாளராக பணிபுரியும் ஒங்கல்வாடி கிராமத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஜனா மூர்த்தி (28) காரப்பள்ளம் வன சோதனைச் சாவடியில் வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்து வந்தார்.

இந்நிலையில் காரப்பள்ளம் வன சோதனைச் சாவடியில் வசூலிக்கப்பட்ட வாகனங்களின் நுழைவுக் கட்டணம் சரிவர சம்பந்தப்பட்ட வங்கிக்கு செலுத்தப்படாமல் முறைகேடு நடந்துள்ளதாக ஆசனூர் வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்கள் வங்கிக் கணக்கை சரிபார்த்தபோது இந்த முறைகேடு நடந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்தபோது கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஜனா மூர்த்தி வன சோதனைச் சாவடியில் தினமும் வசூல் ஆகும் வாகன நுழைவுக் கட்டண பணத்தை அங்குள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் செலுத்தி வந்துள்ளார். இதில் சில நாட்கள் வங்கியில் பணத்தை செலுத்தாமல் போலியாக வங்கி சலானை பணம் செலுத்தியது போல் சீல் வைத்து அலுவலக கோப்புகளில் பணம் செலுத்தியது போல் எழுதி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இவ்வாறாக அவர் ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் பணம் கையாடல் செய்தது தெரிய வந்தது. இது தவிர வனப்பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணம், வன விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதமாக விதிக்கப்படும் கட்டணங்களையும் கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட தற்காலிக பணியாளர் ஜனா மூர்த்தி பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது வனத்துறையினர் ஆசனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT