ADVERTISEMENT

’கம்யூனிஸ்ட் மவுத் பீசுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன்’ - ஈரோட்டில் ஹெச் ராசா காட்டம்

01:18 AM Jan 09, 2019 | jeevathangavel


ஈரோட்டில் இன்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: "திருவாருர் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தக்கூடாது என தேர்தலை நிறுத்த யாரோ ஒருவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் ஆஜராகிறார். ஆர்.கே.நகர் போல், திருவாரூரிலும் மூன்றாமிடத்துக்கு சென்று விடுவோம் என்ற பயத்தின் காரணமாக, திமுக தேர்தலை தள்ளி வைக்க அவர்களது கூட்டணிக்கட்சி மூலம் முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT

திமுகவை ஸ்டாலின் சுயமாக வழிநடத்தவில்லை. அந்த கட்சியை பிரிவினைவாத தீய சக்திகள் தான் வழிநடத்துகிறதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

ADVERTISEMENT


இலங்கையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட காரணமாக இருந்த சோனியா காந்தியை அழைத்து வந்து கலைஞர் சிலையை ஸ்டாலின் திறந்துள்ளார்.


கேரளாவில் சபரிமலை பிரச்சினையில் வேண்டுமென்றே மிக மோசமாக பினராயி விஜயன் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் இறை நம்பிக்கையுள்ளவர்கள், ஐயப்பன் கோயிலுக்குச் செல்பவர்கள், மார்க்சிஸ்ட் கட்சியிடம் உறவு வைத்துள்ள திமுகவை முழுமையாக புறக்கணிக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறை முழுமையாக ஊழல்மயமாகியுள்ளது. உயர்நீதிமன்றத்தால் சிலைக்கடத்தல் பிரிவில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐஜி பொன் மாணிக்கவேலுவுக்குத் தேவையான அனைத்து வசதிதிகளையும் அரசு செய்து தர வேண்டும்.


ரபேல் விவகாரத்தில் எவ்வித தவறும் நடக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்த பிறகும், இது குறித்து பார்லிமெண்டில் பேசுவது அநாகரீகம். இந்த தீர்ப்புக்குப் பின் ரபேல் விவகாரத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன் என்று ராகுல் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.


அறிவியல் மாநாட்டில் மகாபாரதக் காலத்தில் சோதனைக்குழாய் குழந்தைகள் பிறந்துள்ளது என ஆந்திர துணைவேந்தர் கூறியுள்ளார். இதனை சர்ச்சைக்குள்ளாக்கக் கூடாது. மகாபாரதம் நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே, அந்த காலத்தில் இதுபோன்று இருந்திருக்காது என்று நாம் சொல்ல முடியாது. காந்தாரி கரு கலைந்து, அதனை நூறு ஜாடிகளில் வைத்திருந்துதான் நூறு குழந்தைகள் பிறந்ததாக மகாபாரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அது சோதனைக்குழாய் குழந்தை என்று சொன்னால், அது குறித்து ஆழமான ஆய்வினை ஏன் செய்யக்கூடாது?

பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் என்று அதிமுக மிரட்டப்படுவதாக தமிழக முதல்வரோ, அதிமுக ஒருங்கிணைப்பாளரோ கூறவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, மத்திய அரசுக்கு சட்டரீதியாக எந்த பொறுப்பும் இல்லை. மாநில அரசின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை நடந்தது. தற்போது அமைச்சர் - அரசு செயலர் இடையே சிகிச்சை தொடர்பாக முரண்பாடு இருக்குமாயின், அதற்கு ஆறுமுகசுவாமி கமிஷன் தான் விடை சொல்ல வேண்டும். அதுவரை காத்திருக்க வேண்டும். ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, வெளிப்படையாக என்ன நடந்தது என்பதைத் தெரிவித்து இருந்திருந்தால், இது போன்ற பிரச்சனைகள் வந்திருக்காது.


தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒரு நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்தபின், நிபந்தனையோடு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என உத்தரவிட்டபின், அதனை செயல்பட அனுமதிக்க வேண்டும். எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி மீதான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழகத்திற்கு பாதகம் செய்யும் எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வராது. அதனை அனுமதிக்கவும் செய்யாது. கேரளாவில் 800 கேவி உயர் மின் அழுத்த மின்சாரம் தரைவழியாக எடுத்துச் செல்லப்படவில்லை. இந்த விஷயத்தில் தமிழக விவசாயிகளிடம் பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்திற்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு நிலையான வருவாய் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்." என்றவரிடம் தீக்கதிர் நிருபர் ஒரு கேள்வி எழுப்ப கம்யூனிஸ்ட் பத்திரிகையா என காட்டமான ஹெச் ராசா " சீனாக்காரன் கம்யூனிஸ்ட் தாஸ் கேப்பிட்டல் தத்துவம் அந்நிய நாட்டு இறக்குமதி இந்து விரோதி அவனின் மவுத் பீசுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்" என எரிச்சலுடன் எழுந்து சென்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT