ADVERTISEMENT

குரு பிறந்தநாளை தமிழகம் முழுவதும் கொண்டாட வேண்டும்! ஜி.கே. மணி அறிக்கை

02:16 PM Jan 29, 2019 | rajavel



பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

மறைந்த வன்னியர் சங்கத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான மாவீரன் ஜெ.குருவின் பிறந்தநாள் விழா வரும் பிப்ரவரி 1&ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காக அனுமதியும் கோரப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ஆனால், வேறு சில தரப்பினரும் அங்கு நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி கோரியிருந்ததால் இரு தரப்பையும் கடந்த 24-ஆம் தேதி அழைத்து அமைதிக் கூட்டம் நடத்திய உடையார்பாளையம் கோட்டாட்சியர், ஜெ.குருவின் பிறந்த நாளையொட்டி அவரது குடும்பத்தினர் மட்டும் அவரது நினைவிடத்தில் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை மலர் தூவி மரியாதை செலுத்த அனுமதி அளித்துள்ளார். வேறு யாரும் மாவீரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தடை விதித்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஆணையிட்டுள்ளார்.

அதேபோல், காடுவெட்டி கிராமத்தில் மாவீரன் பிறந்தநாளையொட்டி பட்டாசு வெடித்தல், பதாகை அமைத்தல், அன்னதானம் வழங்குதல், மேடை அமைத்து ஒலிப்பெருக்கி மூலம் பேசுதல் போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளன.

மாவீரனின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட வேண்டும் என்பது தான் மருத்துவர் அய்யா அவர்களின் விருப்பம் ஆகும். ஆனால், மாவீரன் நினைவிடத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் தவிர, மற்றவர்கள் அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை மீறுவது முறையாக இருக்காது. அதுமட்டுமின்றி, மாவீரன் நினைவிடத்தில் பா.ம.கவினர் அஞ்சலி செலுத்த செல்லும் பட்சத்தில், அதைக் காரணமாக வைத்து வன்முறையைத் தூண்ட சில சக்திகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதால், அதற்கு எந்த வகையிலும் நமது பாட்டாளி சொந்தங்கள் இடம் கொடுக்கக்கூடாது.

அதேநேரத்தில் மாவீரன் ஜெ.குருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் அனைத்து ஊர்களிலும் அவரது உருவப்படத்தை வைத்து மாவீரனுக்கு மரலஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மாவீரனின் பிறந்தநாளை அனைத்து இடங்களிலும் சிறப்பாகவும், அதேநேரத்தில் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அமைதியாகவும் கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT