ADVERTISEMENT

பணம் தராத ஆத்திரத்தில் தாத்தாவை கத்தியால் குத்திய பேரன்!

11:48 AM Oct 26, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் முருகேசன் (75) - லட்சுமி தம்பதி. இவர்களுக்கு செல்லத்துரை, பாபு என இரு மகன்கள், ராஜாத்தி என்ற ஒரு மகள் என மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். அதேபோல் இதில் அனைவருக்கும் திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், முருகேசன் மகன் செல்லத்துரை என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது இரண்டாவது மகன் பாபு 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், பெரியவர் முருகேசனின் மனைவி லட்சுமியும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார்.

இந்த நிலையில் முருகேசன் தனியாக வசித்துவந்துள்ளார். வயது மூப்பின் காரணமாக கைத்தடி உதவியோடு வாழ்ந்துவந்த முருகேசன், அப்பகுதியில் உள்ள சிலருக்கு வட்டிக்குப் பணம் கொடுத்து வசூல் செய்துவந்துள்ளார். அதற்கு உதவியாக அவரது இளைய மகன் பாபுவின் மகனும், பேரனுமான சின்னத்துரையை அழைத்துச் சென்று பணம் வசூல் செய்துவந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் முருகேசன் வட்டிக்குக் கொடுத்து வசூலித்த பணத்தில் தனது மகள் ராஜாத்திக்கு இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இதைக் கண்ட அவரது பேரன் தாத்தாவிடம், “அத்தைக்கு ஏன் பணம் கொடுத்தாய்” என்று கேட்டுள்ளார். இதனால் தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி முருகேசன், கழுத்தில் கத்தியால் குத்திய நிலையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து அவரது மகள் ராஜாத்தி சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப் பதிவுசெய்து குற்றப் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ், முருகன், தனிப்பிரிவு எஸ்.ஐ. சுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் குற்றவாளி குறித்து விசாரணை நடத்திவந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில், வெளியாட்கள் யாரும் முருகேசனை கொலை செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து முருகேசன் உறவினர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர். அதன்பேரில் அவரது பேரன் சின்னத்துரை (15) என்பவர் போலீஸ் விசாரணையின்போது முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், தனது தாத்தா முருகேசனை கடந்த 22ஆம் தேதி அதிகாலை கத்தியால் குத்திக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

வட்டிக்கு வசூலித்த பணத்தை தனது மகளுக்கு கொடுத்ததோடு மற்ற பேரப் பிள்ளைகளுக்கும் பிரித்துக் கொடுத்துவிடுவாரோ என்ற கோபத்தில் அவரை கொலை செய்ததாக சிறுவன் சின்னதுரை கூறியுள்ளான். இதையடுத்து போலீசார் அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் கூர்நோக்கு சிறுவர் இல்லத்தில் ஒப்படைத்தனர். பெரியவர் முருகேசன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான தனிப்படை போலீசார் சிறப்பாக விசாரணை செய்து குற்றவாளியைக் கைது செய்ததை அடுத்து மாவட்ட எஸ்.பி. ஜியாவுல் ஹக் தனிப்படை போலீசார் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT