villuppuram child jay sri incident police investigation lawyers association

Advertisment

விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்ற மனித மிருகங்களுக்காக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக வேண்டாம் என வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை கால்களைக் கட்டி வாயில் துணி வைத்து சத்தமில்லாமல் அவரது உடம்பில் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற அதிமுகவைச் சேர்ந்த கலியபெருமாள், முருகன் ஆகிய இருவருக்கும் பிணை கோரவோ அல்லது வழக்கு நடத்தவோ தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த வழக்கறிஞர்களும் ஆஜராக வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம.சேயோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "95 சதவீத தீக்காயங்களுடன் போராடிய சிறுமி ஜெயஸ்ரீ சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அந்தச் செய்தி இதயமுள்ள எந்த ஒரு மனிதரையும் பதைபதைக்க வைக்கும், துடிதுடிக்க வைக்கும். சிறுமியை இழந்து வாடும் குடும்பத்திற்கு மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். சட்டத்தின் முன் மேற்படி இருவரையும் நிறுத்தி, விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி, இருவரையும் தூக்குமேடைக்குத் தமிழக அரசு அனுப்பவேண்டும். பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் தற்போது விளங்குகிறது என்பதற்கு இந்தச் சம்பவமே ஒரு உதாரணம்.

Advertisment

ஏற்கனவே பொள்ளாச்சி பாலியல் குற்றத்தால் பெண்களைப் பாதுகாக்கத் தவறிய மாநிலமாக தமிழகம் அவப்பெயர் சந்தித்துள்ளது. மேலும் தற்பொழுது விழுப்புரத்தில் ஏற்பட்டுள்ள சம்பவமானது. இந்த அரசுப் பெண்களைப் பாதுகாக்க தவறிவிட்டது என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது. பெண்கள் வீட்டின் கண்கள். பெண்களைக் காக்க வேண்டியது ஒவ்வொரு அரசின் கடமை. அந்தக் கடமையிலிருந்து தமிழக அரசு தவறி விட்டது.

மேற்படி இரு குற்றவாளிகளையும் பிணையில் விடாமல், அவர்கள் பிணை கோரினால் அதைக் கடுமையாக அரசுத்தரப்பில் எதிர்க்க வேண்டும். அவர்களைக் காவலில் வைத்து, வழக்கு விசாரணையை விரைவில் நடத்தி உச்சகட்ட தண்டனையான தூக்குத் தண்டனையை அவர்களுக்கு கிடைக்க அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும். அதை விடுத்து விட்டு ஆளும் கட்சியைச்சேர்ந்தவர்கள் என்பதற்காக அவர்களைத் தப்பிக்க வைக்கக் கூடிய படுபாதகச் செயலைத் தமிழக அரசு செய்யக்கூடாது" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் "தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் யாரும் மேற்படி இரு குற்றவாளிகளுக்கும் ஆஜராக வேண்டாம்," எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.