ADVERTISEMENT

விவசாய கடன் பெறுவதற்கு புதிய கணக்கு தொடங்கும் நடைமுறையை துரிதப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு!

07:47 PM Oct 21, 2020 | kalaimohan

ADVERTISEMENT

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் பெறுவதற்கு, மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு துவங்கும் நடைமுறையைத் துரிதப்படுத்த, தேவையான நடைமுறையை ஏற்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வரும் விவசாய கடன்களை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு துவங்கி, அவற்றின் மூலமாகப் பெற வேண்டும் என, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், கடந்த ஜூலை 7 -ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கிராமப்புற விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்றும், வங்கிக்கணக்கு துவங்க அவகாசம் அளிக்காமல், இந்த புதிய நடைமுறையை அமல்படுத்த உள்ளதாகவும் கூறி, இதை எதிர்த்து, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விவசாயிகள் பயிர்க்கடன்களை உடனடியாக பெற முடியாது என்பதால், இந்த புதிய நடைமுறையை நவம்பர் 1-ம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும், விவசாயிகள், மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு துவங்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு துவங்குவதற்கான விண்ணப்பங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவற்றை, விவசாயிகள் மூலம் பூர்த்தி செய்து பெற்று, மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, கணக்குகள் துவங்கப்படும். மேலும், தமிழகத்தில் 36 மாவட்டங்களில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், 2 லட்சத்து 90 ஆயிரத்து 33 விவசாயிகளுக்கு, 2 ஆயிரத்து 256 கோடியே 21 லட்சம் ரூபாய் விவசாயக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாநிலத்தில் 4,450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில், 90 லட்சம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். கூட்டுறவு சங்கங்களில் பணியாளர்கள் போதுமான அளவில் இல்லாததால், அத்தனை விவசாயிகளுக்கும் கணக்கு துவங்குவதற்கு நீண்டகாலம் ஆகும் என்பதால், கணக்கு துவங்கும் நடைமுறையை துரிதப்படுத்த, தேவையான நடைமுறையை ஏற்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நபார்டு வங்கிக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT