ADVERTISEMENT

வீடு வீடாகச் சென்று மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்!

11:23 PM Nov 21, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக அரசின் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில், 399 அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பிற்காகச் சேர்ந்துள்ளனர். 6 பி.டி.எஸ் இடங்கள், பணம் கட்ட முடியாது என்பதால், யாரும் தேர்வு செய்யாமல் காலியாக உள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 மாணவ, மாணவிகள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 3 மாணவ, மாணவிகள் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், ஒரு மாணவர் தனியார் பல் மருத்துவமனையிலும் சேர்ந்துள்ளனர்.

இதில், கீரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து, 5 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். இவர்களில் செரியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை, ஒரே வகுப்பில் படித்த 3 மாணவ, மாணவிகளுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. இந்த மாணவ மாணவிகளை வீடு வீடாகச் சென்று பாராட்டி இனிப்பு வழங்கிய பள்ளி ஆசிரியர் அன்பரசன், ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கினார். மேலும், உதவிகள் செய்வதாகக் கூறினார்.


அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு கிராமத்தில், உள்ள அரசுப் பள்ளியில் படித்து, கோவை தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவி காயத்ரியை, அவரது குடிசை வீட்டில் சந்தித்த ஆலங்குடி திமுக எம்.எல்.ஏ மெய்யநாதன், மாணவிக்கு சால்வை அணிவித்துப் பாராட்டியதுடன், கல்வி உதவியாக ரூ. 25 ஆயிரம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். நேற்று, வெள்ளிக்கிழமை 11 அரசுக் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர், தனது சி.வி.பி பேரவை சார்பில், தலா ரூ. 50 ஆயிரம் வழங்கினார். ஏழை மாணவர்களின் கல்விக்காகப் பலரும் உதவிகள் செய்யும் நிலையில், மேலும் உதவிகள் கிடைத்தால் நல்லது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT