ADVERTISEMENT

அறுவை சிகிச்சை உபகரணங்களை சுத்தம் செய்யும் சிறுவன்; அரசு மருத்துவமனையில் அவலம்

04:47 PM Dec 16, 2023 | ArunPrakash

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணிக்கு அருகே உள்ளது சோட்டையன் தோப்பு. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் பவுல்ராஜ். சுமார் 45 வயது மதிக்கத்தக்க பவுல்ராஜ் கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அவருக்கு கால் விரலில் புண் ஏற்பட்டுள்ளது. இதற்காக சிகிச்சையெடுத்து வந்தாலும் நாளடைவில் புண் பெரிதாகியுள்ளது. இதன் காரணமாக மருத்துவர்கள் இவரின் கால் விரலை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றியுள்ளனர். இதனால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ADVERTISEMENT

இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல், மற்ற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய பொதுமக்கள் பல்வேறு சிகிச்சை காரணமாக வந்து செல்கின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் போதுமான அளவு இல்லை என்றும், அதே சமயத்தில் செவிலியர் பற்றாக்குறையும் உள்ளது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் பவுல்ராஜிக்கு காலில் இருந்த புண்ணை சுத்தம் செய்து, செவிலியர் ஒருவர் சிகிச்சையளித்துள்ளார். அப்போது, அவர் பயன்படுத்திய கத்தரிக்கோல் உள்ளிட்ட பொருட்கள் ரத்தக் கறையுடன் இருந்துள்ளது.

அதன் பின்னர், ஒருவழியாக சிகிச்சை முடிந்த பிறகு, பவுல்ராஜின் 12 வயது மகனிடம் கொடுத்து அதனை சுத்தம் செய்து வரும்படி, அனுப்பியுள்ளனர். உடனே அந்தச் சிறுவனும் கையுறைக் கூட அணியாமல் ரத்தமும் சதையுமாக இருந்த அறுவை சிகிச்சை உபகரணங்களை ஒரு வாஷ் பேஷனில் வைத்து சாதாரணமாக கழுவியுள்ளான். அப்போது, உறவினரை பார்ப்பதற்காக, மருத்துவமனைக்குச் சென்ற ஒருவர், சிறுவன் அறுவை சிகிச்சை உபகரணங்களை கழுவும்போது அதனை வீடியோ எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், வீடியோ எடுக்கும்போதே அந்தச் சிறுவனிடம், தம்பி... இதை ஏன் நீங்க கழுவுறீங்க? எனக் கேட்டுள்ளார். அதற்கு சிறுவனும், தன்னுடைய அப்பாவின் கால் விரலை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட்டதாகவும், அதற்காக காலில் கட்டு போடப்பட்டுள்ளது எனவும், அந்தக் கட்டினைப் பிரித்து மருத்துவர்கள், புண்ணை சுத்தம் செய்தனர் எனவும், அப்போது, உபகரணங்களில் ரத்தக் கறை படிந்ததால் இதனை சுத்தம் செய்து வரும்படி தன்னை அனுப்பியதாகவும் கூறியுள்ளான்.

இவற்றை தனது செல்போன் மூலமாக படம் பிடித்த அந்த நபர், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், தனது உறவினர் ஒருவரை பார்த்து வருவதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றதாகவும், அப்போது, சுமார் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ரத்தக் கறையுடன் இருந்த, அறுவை சிகிச்சை உபகரணங்களை கையுறை கூட அணியாத தனது கைகளால் சுத்தம் செய்தார் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த மருத்துவமனைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் குறிப்பிட்டிருக்கும் அவர், இதுபோல நேரில் சென்று பார்வையிட்டால் உண்மை நிலவரம் தெரியாது எனவும், மாறுவேடத்தில் சாதாரண நபரைப் போன்று சென்றால் மருத்துவமனையில் நடக்கும் குளறுபடிகள் தெரியவரும் எனவும் கூறியிருக்கிறார். இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பார்த்த பலரும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT