ADVERTISEMENT

உத்தரவை மதிக்காத போக்குவரத்துக் கழகம்; அதிரடி காட்டிய நீதிமன்றம்

03:19 PM Mar 31, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் சதீஷ்(24) பி.ஏ பட்டதாரியான இவர், கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்துள்ளார். சதீஷ் தினந்தோறும் தனது பைக்கில் வேலைக்குச் சென்று வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு உக்கடம் சிக்னல் அருகே சதிஷ் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியதில் அவர் அங்கிருந்து தூக்கி வீசப்பட்டார். மேலும், இதில் பலத்த காயமடைந்த சதீஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதே சமயம், சதீஷின் உடலை பார்த்து கண்ணீர்விட்டுக் கதறிய அவரது பெற்றோர், தன் மகனின் இழப்பிற்கு நஷ்ட ஈடு கேட்டு கோவை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2019ஆம் ஆண்டில் சதீஷ் குடும்பத்தினருக்கு 12 லட்சம் ரூபாய் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், விபத்துக்கான இழப்பீட்டுத் தொகை வழங்காததால், வட்டியுடன் சேர்த்து 16 லட்சம் வழங்கக் கோரி மீண்டும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர் சதீஷின் குடும்பத்தினர்.

அதன்பிறகு வழக்கு விசாரணையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு 16 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும், அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கோர்ட் உத்தரவுப்படி கடந்த ஜனவரி மாதம் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு 7.40 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. மீதமுள்ள தொகையை ஒரு மாதத்திற்குள் வழங்குவதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், அந்தத் தொகையை ஒரு மாதம் ஆகியும் வழங்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்துள்ளனர். இதற்கிடையில், 2 ஆவது முறையாக தற்போது அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT