ADVERTISEMENT

மறைந்த நக்கீரன் நிருபர் அருள்குமார் குடும்பத்திற்கு அரசு வழங்கிய உதவி 

06:01 PM Dec 20, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நக்கீரன் கோவை மாவட்ட செய்தியாளராகப் பணிபுரிந்தவர் அருள்குமார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

அருள்குமாரின் திடீர் மரணம் அவரின் குடும்பத்திற்குப் பேரிழப்பாய் மிகப் பெரிய துயரத்தைக் கொடுத்தது. அருள்குமாருக்கு நிர்மலா என்ற மனைவியும், பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் தமிழ்மதி, பத்தாம் வகுப்பு படிக்கும் இளஞ்சித்திரன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில் நமது நக்கீரன் ஆசிரியர் அவர்கள் கோவைக்கு நேரில் சென்று அருள்குமாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அடுத்த சில நாட்கள் கழித்து மீண்டும் அருள்குமார் வீட்டுக்கு நேரில் சென்ற ஆசிரியர் அவரது இரண்டு மகன்களின் கல்விச் செலவுக்குத் தனியாக நிதி உதவி வழங்கியதோடு நக்கீரனில் பணிபுரிந்த காலத்திற்கு வழங்க வேண்டிய பணப் பலன்களைத் தனியாகவும் அவரது குடும்பத்தினருக்குக் கொடுத்து நம்பிக்கை கொடுத்தார்.

அதோடு அரசு வழங்கும் நிவாரண உதவிபெறும் நடவடிக்கையும் நக்கீரன் அலுவலகம் மூலம் எடுக்கப்பட்டது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் செந்தில் அண்ணா ஆகியோரின் ஒத்துழைப்பு மற்றும் தொடர் முயற்சியால், நக்கீரனில் இருபது வருடம் பணியாற்றிய அருள்குமார் குடும்பத்திற்கு அரசின் நிவாரண உதவி ஐந்து லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி டிசம்பர் 20ம் தேதி மதியம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் டாக்டர் சமீரன், மறைந்த அருள்குமார் மனைவியிடம் ரூபாய் ஐந்து லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். கோவை பி.ஆர்.ஓ. செந்தில் அண்ணா அவர்கள் உடனிருந்தார். தமிழக அரசுக்கும் செய்தித் துறைக்கும் நக்கீரன் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT