ADVERTISEMENT

கோகுல்ராஜ் கொலை வழக்கு: அரசுத்தரப்பு சாட்சியிடம் ஜன. 18ம் தேதி குறுக்கு விசாரணை! 

03:58 PM Jan 12, 2019 | elayaraja


கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியான திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலரிடம் வரும் 18.1.2019ம் தேதி குறுக்கு விசாரணை நடத்தப்பட உள்ளது.

ADVERTISEMENT


சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23), கடந்த 23.6.2015ம் தேதியன்று ஆணவக்கொலை செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் அவருடைய சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது.

ADVERTISEMENT


இந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையைச் சேர்ந்த யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.


இந்த வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகளிடம் 30.8.2018ம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது. கைதானவர்களில் ஜோதிமணி, அமுதரசு தவிர மற்ற 15 பேர் ஆஜராகி வருகின்றனர்.


கடந்த 10ம் தேதி, அரசுத்தரப்பில் 41வது சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். குற்றவாளிகளை கைது செய்தபோது சிலரிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.


அவ்வாறு கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஒரு வாகனத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு வராததால், மறுநாளுக்கு இந்த வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். அதன்படி நேற்று (11.1.2019) விஏஓ மணிவண்ணனிடம் தொடர்ந்து இரண்டாம் நாளாக விசாரணை நடந்தது.


சம்பவத்தன்று யுவராஜ் பயன்படுத்திய செந்தில் என்பவருக்குச் சொந்தமான 5506 என்ற பதிவெண் கொண்ட பல்சர் மோட்டார் சைக்கிளை போலீசார் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்திருந்தனர். அந்த வாகனத்தை அரசுத்தரப்பு சாட்சி நேற்று சரியாக அடையாளம் காட்டினார்.


இதையடுத்து, கைது செய்யப்பட்ட எதிரிகளில் ஒருவரான குற்றவாளி கூண்டில் இருக்கும் சதீஸ் என்பவரை அடையாளம் காட்டுமாறு அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பவானி பா.மோகன் கூறினார். ஆனால் அரசுதரப்பு சாட்சி, அவரை இரண்டாம் முறையாகவும் தவறாக அடையாளம் காட்டினார். மேலும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி வீடியோ காட்சிகளை பார்த்து எதிரிகளை அடையாளம் காட்டச்சொன்னார்.


அதற்கு விஏஓ மணிவண்ணன், மூக்குக் கண்ணாடியை எடுத்து வராததால், வீடியோ பார்த்து அடையாளம் சொல்ல முடியாது. அடுத்து முறை சொல்வதாக கூறினார். இதையடுத்து சாட்சி விசாரணையை வரும் 18.1.2019ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.


அன்றைய தினம் அவரிடம் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மற்றொரு அரசுத்தரப்பு சாட்சியான விஏஓ சுரேஷ் என்பவரும் அன்று சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT