ADVERTISEMENT

“உலகளாவிய வாய்ப்புகள் சிறு, குறு நிறுவனங்களின் கதவைத் தட்டுகின்றன” - பிரதமர் மோடி

08:24 PM Feb 27, 2024 | kalaimohan

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். அதன்படி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வணக்கம் எனக் கூறி பேசுகையில், “கொங்கு பகுதியில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் கொங்கு பகுதியானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜவுளி துறையிலும் சிறந்து விளங்குகிறது. தொழில்துறையில் வளர்ச்சி பெற்ற பகுதியாக திருப்பூர் திகழ்கிறது. உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்கும் மாநிலம் என்பது இந்த கூட்டத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது. நாட்டின் அரசியல் வளர்ச்சியில் தமிழகம் புதிய மையமாக மாறியுள்ளது.

ADVERTISEMENT

தமிழ் மொழி மிகவும் பழமையானது. பல்வேறு சிறப்புகளை கொண்டது. தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கிறது. கடந்த 1991இல் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு இடையில் காஷ்மீரில் தேசியக்கொடியை ஏற்றினோம். நல்லாட்சியை நடத்தி தமிழகத்திற்கு கல்வி, சுகாதாரத்தை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வரவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாதான் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை கொடுத்தார். ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றினார். என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்பதை இங்கு கூடியுள்ள மக்கள் மூலம் தெரிகிறது. 2024 தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும். ஒவ்வொரு பாஜக தொண்டரும் தேசமே பிரதானம் என கருதி உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதனையடுத்து மதுரையில் உள்ள பள்ளி வளாகம் ஒன்றில் நடைபெறும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன டிஜிட்டல் செயலாக்க கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் இடம் பெற்றுள்ள டிஜிட்டல் மயமாக்கல் செயலாக்கத் திட்டங்கள் குறித்த புகைப்படங்களையும் பார்வையிட்டார். மேலும் மாணவ மாணவிகளுடனும் உரையாடினார். மாநாட்டில் உரையாற்றுகையில், “உலகளாவிய வாய்ப்புகள் நமது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கதவைத் தட்டுகின்றன. அதே சமயம் பல நாடுகளில் உற்பத்தியாகும் கார்கள், நம் சிறு - குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தயாரிக்கும் பாகங்களை கொண்டுள்ளன” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். பின்னர் மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை காலை 8.40 மணிக்கு மதுரையிலிருந்து தூத்துக்குடி புறப்படுகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT