ADVERTISEMENT

சிறுமியின் கருமுட்டை வியாபாரம்... நக்கீரன் செய்தி எதிரொலி... ஐவர் குழு அமைத்த முதல்வர்!

06:25 PM Jun 11, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

'16 வயது சிறுமிக்கு 16 முறை கருமுட்டை வியாபாரம்... கல்லா கட்டும் மருத்துவ உலகம்..!' என்ற தலைப்பில் ஈரோடு சிறுமியின் கருமுட்டை விவகாரம் பற்றி சென்ற நக்கீரன் இதழில் செய்தி வெளியாகியிருந்தது. விரிவான அச்செய்தியில் அரசு இதில் கவனம் செலுத்தி மருத்துவக் குழுவை அமைத்து சட்ட விதிகளை உருவாக்கி முறைப்படுத்த வேண்டும் என்பதையும் கூறியிருந்தோம்.

நக்கீரன் செய்தி எதிரொலியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு சார்பில் ஒரு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் குடும்ப நலத்துறை இயக்குநர் துணை தலைவராகவும், மகளிர் அமைப்பைச் சேர்ந்த வசுதா ராஜசேகர், மகப்பேறு பேராசிரியர் டாக்டர் மோகனா, சட்டத்துறை உதவி செயலாளர் ஆகிய ஐந்து பேர் அடங்கிய இக்குழு செயல்படும். இதன்படி இனிமேல் 23 வயது முதல் 35 வயது உள்ள பெண்கள் மட்டுமே கருமுட்டை தானம் வழங்க முடியும். அதுவும் ஒரு பெண் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே அதுவும் 7 கரு முட்டைகள் மட்டுமே வழங்க முடியும். சட்டப்படி மருத்துவர்கள் செயல்பட வேண்டும். முட்டை வழங்கும் பெண்களை எந்த வகையிலும் தவறாக பயன்படுத்த கூடாது. கருத்தரிப்பு மையங்கள் எந்த மோசடிகளிலும் ஈடுபடக் கூடாது. அப்படி சட்ட விதிமீறல் நடந்தால் அந்த மருத்துவர்களுக்கு குறைந்த பட்சம் ஐந்து முதல் 10 லட்சமும் மறுமுறையும் தவறு செய்தால் 3 முதல் 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் உடன் 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்கிறது இச்சட்டம். அரசு அமைந்த ஐவர் குழு இவற்றை நடைமுறைப்படுத்தும்.

இதன் மூலம் கரு முட்டை வியாபாரத்தில் பெருவணிக நோக்கோடு கொள்ளையடித்து வந்த தனியார் மருத்துவமனைகளுக்கு சட்டப்படியான நெருக்கடியும் தவறு செய்து தப்பிக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரத்தில் ஈரோட்டைச் சேர்ந்த இரண்டு தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர்கள் ஊழியர்களிடம் ஏற்கனவே ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரணை செய்தார்கள். மேலும் சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் சேலம், ஓசூர், ஆந்திர மாநிலம் திருப்பதி, கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஆகிய தனியார் மருத்துவமனைகளுக்கும் விசாரணைக்கு நேரில் வந்து ஆஜராகுமாறு ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் 11 ந் தேதி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஓசூர் தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த நிர்வாக இயக்குநர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த நிர்வாகிகள், மருத்துவர்கள் என இரண்டு வாகனங்களில் 10 க்கும் மேற்பட்டோர் நேரில் வந்து எஸ்.பி. அலுவலகத்தில் ஆஜரானார்கள். அவர்கள் மருத்துவ பதிவேடுகள் முக்கிய ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர். அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து ஈரோடு சிறுமியின் கருமுட்டை விவகாரம் அதிர்வலையைக் கூட்டி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT