ADVERTISEMENT

தந்தையை கொன்ற மகள் விடுதலை! 

04:34 PM Sep 23, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள கோவில் புறையூர் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன்(40). மாற்றுத்திறனாளியான இவரின் மனைவி ரேவதி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். வெங்கடேசனுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளைய மகள் அவலூர்பேட்டை அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் தனது இளைய மகளுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, மது போதையில் வீட்டிற்கு வந்த வெங்கடேசன், தனது இளைய மகளிடம் வரம்பு மீறி நடந்துகொள்ள முயற்சி செய்துள்ளார். அப்போது அவரது மகள் அருகிலிருந்த கத்தியால் தனது தந்தையின் மார்பில் குத்தியுள்ளார். அதில் 11 அங்குலம் ஆழத்திற்கு அந்தக் கத்தி அவரது நெஞ்சில் பாய்ந்துள்ளது. இதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மகள் தான் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவர், போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் அவர், “எனது தாய் இறந்த பிறகு, பாட்டி வீட்டில் தான் நானும் என் சகோதரியும் வளர்ந்து வந்தோம். அவர் தற்போது சென்னையில் வேலை செய்து வருவதால் நான் பாட்டி வீட்டில் தங்கி இருந்தேன். தற்போது பள்ளி திறக்கப்பட்டு உள்ளதால் நான் படிக்கும் அவலூர்பேட்டை பள்ளிக்குச் செல்வதற்குப் பாட்டி வீட்டிலிருந்து தினசரி சென்று வருவதற்குச் சிரமம் ஏற்பட்டது. அதனால் எனது சொந்த ஊரிலிருந்து பள்ளிக்குச் சென்று வந்தேன்.

இந்த நிலையில் எனது தந்தை, தான் பெற்ற மகளென்றும் பாராமல் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார். அவரிடமிருந்து அவ்வப்போது தப்பித்து வந்தேன். ஆனால், சம்பவத்தன்று பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த என்னிடம், தந்தை குடிபோதையில் எல்லை மீறி நடந்து கொண்டார். அவரிடமிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ளக் கடுமையாகப் போராடினேன். ஆனால், அவர் தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. அவரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள அருகில் கிடந்த கத்தியை எடுத்து அவரது நெஞ்சில் குத்தினேன். அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து இறந்து போனார். அப்போது செய்வதறியாது திகைத்த நான், பக்கத்து வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் அமர்ந்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு இதை எப்படி வெளியே சொல்வது என்று புரியாமல் மீண்டும் வீட்டுக்கு வந்தேன். அப்போதுதான் நான், அவரை யாரோ கத்தியால் குத்தியது போல நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று நடந்த சம்பவத்தைத் தெளிவாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து மாவட்ட காவல் காவல்துறை, ‘இந்தியத் தண்டனைச் சட்டம் விதி 100ன் கீழ்’ ஒரு பெண் தனியாக இருக்கும்போது, அவரது கற்புக்கு ஆணிடமிருந்து தீங்கு ஏற்படுமானால் அவரிடமிருந்து தப்பிக்க முடியாத சூழ்நிலையில், தன்னை காப்பாற்றிக் கொள்ள வேறு வழி இல்லாத காரணத்தினால் இதுபோன்று நடந்து கொள்ளலாம். அப்படி நடந்துகொண்ட பெண்களுக்குத் தண்டனைச் சட்டத்திலிருந்து விதிவிலக்கு உள்ளது. அதனடிப்படையில் மாணவியைக் கைது செய்து விடுதலை செய்வதாக காவல்துறை தரப்பில் கூறுகின்றனர். மேலும் அவருக்கு மன ரீதியான பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என அவருக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்கு காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT