ADVERTISEMENT

ககன்யான் திட்டம்; விண்வெளி வீரராகத் தமிழர் தேர்வு

06:29 PM Feb 27, 2024 | kalaimohan

ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா என 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு இதுவரையில் மனிதர்களை அனுப்பியுள்ளன. அந்த வகையில் இந்தச் சாதனையைப் படைக்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காகக் கடந்த 2007 ஆம் ஆண்டு 10 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்துக்கு ககன்யான் எனப் பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இத்தகைய சூழலில் ரஷ்யாவில் 14 மாதங்கள் பயிற்சி பெற்று ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி இன்று அறிமுகம் செய்து வைத்தார். இந்த குழுவில், குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு ககன்யான் திட்டத்திற்கான லோகோவை பிரதமர் மோடி வழங்கினார்.

ADVERTISEMENT

இது குறித்து பிரதமர் மோடி தெரிவிக்கையில், “2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவுக்கென தனி ஆய்வு மையம் அமையவுள்ளது. 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் தயாரிக்கப்படும் ராக்கெட் மூலம் இந்தியர்கள் நிலவில் கால் பதிப்பர். 4 இந்திய விண்வெளி வீரர்களுக்கு லோகோவை ஒப்படைத்தது எனக்கு மிகவும் சிறப்பான தருணம் ஆகும். இது 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன. குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோரால் இந்தியா பெருமை கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 4 பேரில் ஒருவர் தமிழர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். சென்னையில் பிறந்த இவர் உதகையில் உள்ள வெலிங்கடன் ராணுவ கல்லூரியில் பயின்றவர் ஆவார். தேசிய பாதுகாப்பு அகாடமியில் கடந்த 2003 ஆம் ஆண்டு விமானப் படையில் பணியில் இணைந்தார். இந்திய விமானப் படையில் சிறப்பாக பணியாற்றியதற்காக ஜனாதிபதியின் தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளார். இவர் இந்திய விமானப் படையின் புதிய போர் விமானங்களின் டெஸ்டிங் பைலட்டாகவும் பணியாற்றி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT