ADVERTISEMENT

அரசு வேலை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் மோசடி; முதியவர் பரபரப்பு புகார்

10:48 AM Dec 15, 2023 | ArunPrakash

ஈரோடு கொடுமுடி வெங்கம்பூர் முத்துசாமி தெருவை சேர்ந்த முருகையன் (62) என்பவர் இன்று தனது குடும்பத்தாருடன் ஈரோடு எஸ்.பி.அலுவலகத்தில் வந்து, ஒரு மனு கொடுத்தார்.

ADVERTISEMENT

அதில் அவர் கூறியிருப்பதாவது:- “நான் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு உறவினர் மூலம் ஈரோடு காசிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அறிமுகமானார். அந்த நபர் சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், எனது மகன் அருண்குமார் மற்றும் எனது மருமகள் ஸ்ரீ லாவண்யா நன்றாக படித்து விட்டு வேலையில்லாமல் இருப்பதை தெரிந்து கொண்டு, அந்த நபர் என்னை தொடர்பு கொண்டு உனது மகனுக்கும், மருமகளுக்கும் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாங்கி தருவதாகவும் அதற்கு பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறினார்.

ADVERTISEMENT

அவர் வார்த்தையை உண்மை என்று நம்பி நான் பல தவணைகளில் ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் அவரது வங்கி கணக்கில் செலுத்தினேன். மேலும் அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க எனது மகன், மருமகள் கல்வி சான்றிதழ்கள் அனைத்தையும் அவரிடம் கொடுத்து விட்டேன். ஆனால் அதற்கு பின்னர் அவர் கூறியவாறு அரசு வேலை வாங்கித் தரவில்லை. அவர் எங்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இது குறித்து நான் அவரிடம் பலமுறை கேட்டும், அவர் பணம் தராமல் காலம் தாழ்த்தி, ஏமாற்றி வருகிறார். எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு அந்த நபரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்கு வர வேண்டிய பணம் மற்றும் எனது மகன், மருமகளின் கல்வி சான்றிதழை அந்த நபரிடம் இருந்து பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT