
ஈரோடு மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட காவல் கண்கானிப்பாளராக சசிமோகன் ஐ.பி.எஸ் பொறுப்பேற்று இதுவரை 10 நாட்கள் தான் ஆகிறது. இந்த பத்து நாளில் மட்டும் சட்ட விரோதமாக மது விற்றதாக 214 பேரை போலீசார் கைது செய்து, 7,621 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடந்த மாதம் 10ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி பிற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் மதுபாட்டில்களை கடத்தி வந்து மாவட்டத்திற்குள் அதிக விலைக்கு பல நபர்கள் விற்பனை செய்து வந்தனர்.
மேலும், சிலர் தடை செய்யப்பட்ட கள்ள சாராயத்தை உற்பத்தி செய்து அதை விற்பனை செய்து வந்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புது எஸ்.பி. சசிமோகன் மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்தார். அதன்பேரில், சென்ற 10 நாளில் மட்டும் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்றதாக 216 வழக்குபதிவு செய்யப்பட்டு, 214பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கர்நாடகா மதுபாட்டில்கள் 6,310, தமிழக மதுபாட்டில்கள் 1,311 என மொத்தம் 7,621 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுமட்டும் அல்லாமல் 122 லிட்டர் கள்ள சாராயம், 3,350 சாராய ஊறல், 250 லிட்டர் கள், மது கடத்த பயன்படுத்தியதாக 36 இரு சக்கர வாகனங்கள், 16 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு லாரி என 53 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் ஒரு நம்பர் லாட்டரி தொழிலில் ஈடுபடும் கும்பல், கஞ்சா, குட்கா, பான் மசாலா என போதை பொருட்கள் விற்பனை செய்வோர் என 47 வழக்குகளும் 210 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்ட விரோத செயல் புரிவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கையும் அதற்கு துணை போகும் காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எஸ்.பி. சசிமோகன் அறிவித்துள்ளார். ஈரோட்டில் இனி சட்டவிரோத செயலுக்கு இடமில்லை என்பதை தொடர்ந்து உறுதி செய்து வருகிறார் இந்த இளம் எஸ்.பி.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)