ADVERTISEMENT

“பன்வாரிலால் புரோகித் குற்றச்சாட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை..” - முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம்

09:36 AM Oct 23, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் 21 அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றின் நிர்வாகப் பணிகளை துணைவேந்தர்கள் கவனிப்பார்கள். துணைவேந்தர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். இவர்கள் தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறையின் தேடல் குழு பரிந்துரை மூலம் பரிந்துரை செய்யப்பட்டு, பல்கலைக்கழக வேந்தரான தமிழ்நாடு ஆளுநர் துணைவேந்தர்களை நியமிப்பார். இதில் தமிழ்நாடு உயர் கல்வித்துறையின் தேடல் குழு மூன்று நபர்களை பரிந்துரை செய்யும், அதில் ஒருவரை ஆளுநர் துணைவேந்தராக நியமிப்பார். இந்த தேடல் குழுவில், ஆளுநரின் பிரதிநிதி, தமிழ்நாடு அரசின் பிரதிநிதி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் பிரதிநிதி என மொத்தம் மூன்று நபர்கள் இருப்பார்கள். ஆளுநரின் பிரதிநிதி, தேடல் குழுவின் தலைவராக செயல்படுவார்.

இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளது என தமிழ்நாட்டின் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குற்றஞ்சாட்டியிருந்தார். இதனை அவர், அப்போது நடந்த உயர் கல்வி மேம்பாட்டு கருத்தரங்கில் பேசினார். இது அப்போது தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கு அப்போது விளக்கம் அளித்த அன்றைய உயர் கல்வித்துறை அமைச்சரான கே.பி. அன்பழகன், துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கோ உயர்கல்வித் துறைக்கோ ஒரு சம்பந்தமும் இல்லை. தேடல் குழு பரிந்துரை செய்யும் 3 நபர்களில் துணைவேந்தரை தேர்வு செய்து நியமிப்பது ஆளுநர்தான் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பன்வாரிலால் புரோகித், பணி காலம் முடிவடைந்து தமிழ்நாட்டில் இருந்து இடமாறுதல் பெற்று பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பஞ்சாப்பில் நடந்த அரசு விழா ஒன்றில் பேசிய அவர், “தமிழ்நாட்டில் 2017 முதல் 2021 வரை பணி செய்தது மிக மோசமான அனுபவம். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி ரூ. 40-50 கோடிக்கு விற்கப்பட்டது” என குற்றம்சாட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் இவ்வாறு நடந்தததாக மீண்டும் ஒரு முறை பன்வாரிலால் புரோகித் குற்றஞ்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், “பஞ்சாபில் நடந்த ஒரு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கு ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை பெற்று நியமனம் செய்ததாக பேசி உள்ளார். துணை வேந்தர் நியமனத்திற்கு ஆளுநர் மட்டுமே கலந்து கொண்டு நேர்காணல் நடத்துகிறார். ஆளுநரே தேர்வு செய்து அறிவிக்கிறார். இதில் அரசுக்கோ, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கோ, உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த எனக்கோ எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லை.

அப்படி இருக்கிறபோது, தமிழகத்தில் தான் பணியாற்றிய காலத்தில் ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை பெற்றுக்கொண்டு துணைவேந்தரை நியமனம் செய்த நிலை இருந்தது என இன்றைய பஞ்சாப் ஆளுநர், பேசியது ஏறக்கூடியதாக இல்லை. பஞ்சாபில் அவர் துணைவேந்தரை நியமிக்கும் வாய்ப்பு இல்லை என்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தை குறை கூறுவதை ஏற்க முடியாது. துணைவேந்தர் நியமனம் என்பது முழுக்க முழுக்க ஆளுநரை சார்ந்தது. அதில் எந்த தவறு நடந்தாலும் அந்த காலகட்டத்தில் ஆளுநராக பணியாற்றிய அவரையே சார்ந்தது ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.

பன்வாரிலால் புரோகித் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகித்தபோது, மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட விவகாரம் கடும் எதிர்ப்பை கிளப்பியது. ஆளுநர் அரசு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற விமர்சனங்களையும், பல சர்ச்சைகளையும் தமிழ்நாட்டில் அவர் சந்தித்தார் என்பதும், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை தொட்டு அதற்கு எதிர்ப்புகள் எழுந்து பிறகு அதற்கு அவர், அவரது பணியை பாராட்டி அப்படி செய்ததாகவும் கூறி வருத்தம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT