ADVERTISEMENT

பண மோசடியில் முன்னாள் டி.ஜி.பி. தலையீடு இருந்தது! -ஆதாரங்களை ஒப்படைக்கும்படி நடிகர் சூரிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

07:51 AM Dec 08, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நில மோசடி புகாரில், ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ரமேஷ் குடவாலா ஈடுபட்டதற்கான ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக, நடிகர் சூரி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவற்றை காவல்துறையிடம் வழங்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நிலமோசடி தொடர்பாக, முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோருக்கு எதிராக அடையாறு காவல் நிலையத்தில் நடிகர் சூரி புகார் அளித்தார். அந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி, நடிகர் சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி டி.ரவீந்திரன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிரபாவதி ஆஜராகி, காவல்துறை முறையாக விசாரித்து வருவதாகக் கூறி, விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில், 3 கோடி ரூபாய் அளவிற்கான மோசடி நடந்ததில் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனுக்கு மட்டுமே தொடர்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டு உள்ளதாகவும், ஓய்வுபெற்ற டி.ஜி.பி.ரமேஷ் குடவாலா எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், சூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்பேன்ட் தினேஷ், பண மோசடியில் ரமேஷ் குடவாலாவின் தலையீடு இருந்தது குறித்து, தங்களிடம் ஆடியோ மற்றும் மின்னணு ஆதாரங்கள் உள்ளதாகவும், அதைக் காவல்துறையிடம் ஒப்படைத்தால் அழிக்க வாய்ப்புள்ளதால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றும்போது, சி.பி.ஐ. வசம் தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாகவும் வாதிட்டார்.

இவற்றைப் பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக நடிகர் சூரியிடம் உள்ள ஆவண ஆதாரங்களை காவல்துறையிடம் ஒப்படைத்து, விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவிட்டு, வழக்கை நான்கு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT