ADVERTISEMENT

ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவில்லமாக திறந்துவைக்க உயர்நீதிமன்றம் அனுமதி!

11:55 PM Jan 27, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக திறந்து வைக்க அரசுக்கு அனுமதியளித்து, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தைக் கையகப்படுத்திய உத்தரவை எதிர்த்து ஜெ.தீபக்கும், இழப்பீடு வழங்கிய உத்தரவை எதிர்த்து ஜெ.தீபாவும் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி சேஷசாயி, முன் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தீபக் தரப்பு வழக்கறிஞர், ‘போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதாவின் உடைமைகள் மட்டுமல்லாமல், பாட்டியின் உடைமைகளும் இருக்கின்றன. ஜெயலலிதா பயன்படுத்திய கார்களின் நிலை பற்றி அரசு அறிவிக்கவில்லை. ஜெயலலிதாவின் கார்கள், பொருட்கள் பற்றி சட்டத்தில் எதுவும் குறிப்பிடவில்லை’ எனக் குற்றம்சாட்டினார்.

அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘சமூகத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ராஜாஜி, காமராஜ், அண்ணா, எம்.ஜி.ஆர். வீடுகளை நினைவில்லமாக மாற்றியதைப் போல, ஜெயலலிதாவின் வீட்டையும் மாற்ற முடிவு செய்யப்பட்டது. வீட்டில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப் போவதில்லை. எந்த வகையிலும் மனுதாரர் பாதிக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகளாக கையகப்படுத்தும் நடவடிக்கையில் அனைத்து சட்டவிதிகளும் பின்பற்றப்பட்டன. வீடு மனுதாரர்களின் வசம் தற்போது இல்லை. அரசின் வசம் உள்ளது. நாளை திறந்து நினைவு இல்லமாக அறிவிக்கப் போகிறோம். ஜெயலலிதா எப்படி வாழ்ந்தார் என்பதை மக்களுக்குக் காட்டவும், அவரது நினைவைப் பாதுகாக்கவும்தான் வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படுகிறதே தவிர, வணிகப் பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்படவில்லை’ என விளக்கம் அளித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சேஷசாயி, ‘திட்டமிட்டபடி, வேதாநிலையத்தை நினைவு இல்லமாக திறந்து வைக்கலாம். திறப்பு விழா முடிந்த பின், வேதா நிலையத்தின் சாவியை சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும். ஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா, தீபக் அறிவிக்கப்பட்டுள்ளதால், வீட்டில் உள்ள பொருட்களை அவர்கள் முன்னிலையில் கணக்கெடுக்க வேண்டியுள்ளதால், நினைவு இல்லத்துக்குள் பொதுமக்களை அனுமதிக்க கூடாது. அந்தப் பகுதியில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தப் பேனர்களும் வைக்கக்கூடாது’ என்று உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT