ADVERTISEMENT

கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்! சுருக்குமடி வலையை அனுமதிக்கக் கோரிக்கை!

07:43 PM Jul 11, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

சுருக்குமடி வலை கொண்டு மீன்பிடிக்க அனுமதிக்கக்கோரி, நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடற்கரையில் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

கடலூர் மாவட்டத்தில், ஜூன் 01-ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதேசமயம் தமிழ்நாடு கடல் - மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் மற்றும் அரசு ஆணையின்படி சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால், அதனைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. மேலும் அதனை மீறி சுருக்குமடி வலைகள் மற்றும் அதிவேக திறன் கொண்ட இயந்திரங்களை பயன்படுத்தினால், தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி, படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்ததுடன் இதனை மீறுவோருக்கு மீன்வளத்துறை மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தது.

இதனிடையே கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மீனவர்கள் சிலர் சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு தரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

கடலூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் சுருக்குமடி வலைகளுடன் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித்து திரும்பின. கடலூர் துறைமுக பகுதியில் விற்பனைக்காக மீன்கள் இறக்கப்பட்டபோது அங்கு வந்த மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராமலட்சுமி, "சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை விற்கவோ, வாங்கவோ கூடாது. மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்' என எச்சரித்தார். அதையடுத்து சுருக்குமடி மீனவர்கள் தாங்கள் பிடித்த மீன்களை புதுச்சேரி பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்றனர்.

இதுபற்றி தகவலறிந்த மீன்வளத்துறை மற்றும் காவல்துறையினர், கடலூர் மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் வாகன தணிக்கை நடத்தி, மீன்கள் ஏற்றி வந்த லாரிகளை பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கையை எதிர்த்து ஏராளமான மீன் வியாபாரிகள் மீன்வளத்துறை அலுவலத்தில் திரண்டனர். ஒவ்வொரு வாகனத்திலும் இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடைய மீன்கள் இருப்பதாகவும், அதை விடுவிக்காவிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் நீண்ட நேரம் காத்திருந்தும் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு வரவில்லை.

இதனால் 'சுருக்கு மடி வலைகளை அனுமதிக்கும் வரை கடலூர் மாவட்டத்தில் அனைத்து வகையான படகுகளிலிருந்து மீன்கள் வாங்குவதை நிறுத்த போகிறோம், அனைத்து ஐஸ் கம்பெனிகளும் மூடப்படும்' என்று அறிவித்தனர்.

‘சுருக்கு மடி வலைக்கான தடையை நீக்கக்கோரியும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்கக்கோரியும்’ அனைத்து சுருக்குமடிவலை மீனவர்கள், மீன்வளத்துறை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனிடையே டன் கணக்கில் மீன்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை கண்டித்து மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடலூர் துறைமுகம் மற்றும் கடற்கரையில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

அதேவேளையில் பறிமுதல் செய்யப்பட்ட பெரிய வாகனங்களுக்கு ரூபாய் 50 ஆயிரமும், சிறிய வாகனங்களுக்கு ரூபாய் 30 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டு 20 வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.

இதையடுத்து சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி கடலில் இறங்கி போராடப்போவதாக கூறி மீனவர்கள் இன்று கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் குடும்பத்தினருடன் கூடினர்.

அதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் போராட்டக்காரர்களிடம் கடலில் இறங்க அனுமதியில்லை எனக் கூறியதால் கடற்கரையில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அதன்பின்னர் சார் ஆட்சியர் ஜெகதீஸ்வரன், மீன்வளத்துறை, காவல் துறையினர் போராட்டக்காரர்களிடம், ‘அரசுக்கு தகவல் தெரிவித்து கோரிக்கையைப் பரிசீலிப்பதாக’ சமரசம் செய்ததையடுத்து மீனவர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் குவிந்ததால் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT